சில படங்களிலேயே நடித்திருந்தாலும், ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள நாயகிகளுள் ரீமா சென்னும் ஒருவர். கொல்கத்தாவில் படித்து மும்பையில் வளர்ந்த இவர், சினிமாவிற்கு வருவதற்கு முன் தியேட்டர் ட்ராமாக்களில் நடித்து வந்தார். பலருக்கு சினிமாவிற்குள் நுழைய மாடலிங் எப்படி கை கொடுத்ததோ, அதே போல இவருக்கும் மாடலி்ங்கே உதவியது. பெங்காலி மொழி பேசி வளர்ந்த இவர், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மும்மொழி படங்களிலும் ஒரு ரவுண்டு வந்து விட்டார்.


பரவலாக பேசப்பட்ட படங்கள்:


பிரபல நடிகர் உதய் கிரணுக்கு ஜோடியாக சித்ரம் என்ற தெலுங்கு படத்தில் முதன் முதலாக வெள்ளித்திரையில் தோன்றினார். 2000 ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்களிடம் நல்ல வரவேறப்பை பெற்றது. இதனால், ரசிகர்களுக்கு மிகவும் அறிந்த முகமாக மாறிவிட்டார் ரீமாசென். தமிழில் இவர் முதன் முதலாக நடித்த படம், மின்னலே. 2001 ஆம் ஆண்டு கவுதம் மேனனின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சாக்லெட் பாய் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரீமாசென். மின்னலே படத்தில், ஹீரோயின் என்ட்ரி முதல், க்ளைமேக்ஸ் வரை ஹீரோ எப்படி ஹீரோயினை காதலித்தாரோ,  அதே போல ரசிகர்களும் “யாருடா இந்த புதுப் பொண்ணு” என ரீமாசெனை காதலிக்க தொடங்கினர்.


தெலுங்கிலும் தமிழிலும் முதலில் நடித்த படங்கள் ஹிட் அடித்ததை தொடர்ந்து பாலிவுட் பக்கம் திரும்பினார் ரீமா. ஆனால், அங்கே இவர் நடித்தி வெளியான ஹம் ஹோ கையே ஆப்கே படம் தோல்வியை தழுவியது. இதனால், முழு நேரமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார் ரீமாசென். தளபதி விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த பகவதி திரைப்படமும், விஷாலுடன் நடித்த செல்லமே படமும் பெரிதளவில் பேசப்பட்டது. 




நடிகர் விஷாலுடனான கெமிஸ்ட்ரி இவருக்கு நன்றாக ஒத்துப் போக, 2006 ஆம் ஆண்டு மீண்டும் அவருடன் திமிரு படத்தில் இணைந்தார் ரீமாசென். படத்தின் நாயகியாக மட்டுமன்றி, குணச்சித்திர ரோலில் நடிப்பது அல்லது இரண்டாவது கதாநாயகியாக கலக்குவது என தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரீமாசென். அவ்வகையில், இவர் நடித்துள்ள கிரி மற்றும் தூள் ஆகிய திரைப்படங்களே அதற்கு உதாரணம். அது மட்டுமன்றி, மாதவன் நடிப்பில் வெளியான ஜே ஜே திரைப்படத்திலும் “மே மாசம் 98-ல் மேஜரானேனே..” என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.


வில்லி அவதாரம்!


திமிரு படத்தில் “ஏலே இசுக்கு..” என கூப்பிட்ட ஈஸ்வரியை “நீயெல்லாம் ஒரு பொம்பளையா..?” எனக் கேட்ட ரீமா சென், அதற்கு நிகரான வில்லி ரோல் ஒன்றில் நடித்திருந்தார். அதுவரை வட நாட்டு பைங்கிளியாக படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர், முதன் முறையாக சைக்கோ வில்லியாக அவதாரம் எடுத்த படம்தான் வல்லவன்.


சிம்புவை பள்ளிப்பருவத்தில் சைக்கோ தனமாக காதலிக்கும் பெண்ணாக வந்து பலரையும் மிரட்டினார் ரீமாசென். இவர் என்ட்ரி கொடுக்கும் போதும், இவரது வில்லத்தனத்தை வெளியில் காட்டும் போதும் குலவைச் சத்தம் பேக் ரவுண்டில் ஒலிக்க, அதற்கு ஏற்றார் போல் இவரது கதாப்பாத்திரமும் சிறப்பாக சிங்க் ஆனது. சரி இனியாவது ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்க, மறுபடியும் வில்லியாகவே என்ட்ரி கொடுத்தார் ரீமாசென். 




செல்வ ராகவன் இயக்கத்தில் கார்த்தி ஹீரேவாகா நடிக்க 2010ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். படத்தின் ஆரம்பத்தில் ஸ்ட்ராங்கான பெண்ணாக வந்த இவர், இறுதியில் வில்லி உருவமெடுப்பது அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. அனைத்து படங்களையும் விட, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் முதிர்ச்சியும் கவர்ச்சியும் காட்டிய இவர், அதன் பிறகு படங்களில் பெரிதாக நடிப்பதை நிறுத்திவிட்டார். 


சினிமாவில் இருந்து விலகல்?


தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர், 2012 ஆம் ஆண்டில் ஷிவ் கரண் சிங் என்வரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு படங்களில் நடிப்பதையும் நிறுத்திக் கொண்டார். திருமணமான ஓராண்டில் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார் ரீமாசென். இதையடுத்து, ரீமாசென் சினிமாவில் இருந்து விலகிவிட்டதாக கருதப்படுகிறது. ஆனாலும், திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கும் ஜோதிகா, மீனா, லைலா, குஷ்பு ஆகியோரைப் போல இவரும் திரைக்கு திரும்பி வருவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமன்றி, இன்று பிறந்தநாள் கொண்டாடும் ரீமாசெனிற்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.