தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியாகிய எங்கேயும் காதல் என்ற திரைப்படம் மூலமாக நடிகை ஹன்சிகா மோத்வானி திரையுலகில் அறிமுகமானார். அவர் சிவகார்த்திகேயன், சிம்பு, உதயநிதி ஸ்டாலின், சூர்யா, விஜய் என பல நடிகர்களுடனும் இணைந்து அவர் நடித்துள்ளார். மேலும், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை ஹன்சிகா மோத்வானி 105 மினிட்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் உருவாகி வரும் இந்ததிரைப்படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானி மட்டுமே நடித்துள்ளார். திரில்லர் வகையில் உருவாகும் இந்த படத்தின் ஒட்டுமொத்த கதைக்களமும் ஒரே வீட்டில் நடைபெறுவது போல உருவாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், தயாரிப்பு நிர்வாகம் உலகளவில் ரசிகர்களை ஈர்க்கும் பொருட்டு, இப்படத்தினை உலகிலுள்ள பல நாடுகளின் பல்வேறு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளது. தெலுங்கில் உருவாகும் இப்படத்தினை தமிழ், இந்தி ஆகிய மொழிகள் மட்டுமின்றி சைனீஸ், கொரியன் ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்திய திரையின் மொத்த வரலாற்றில், மூன்றாவது முறையாக, ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையமாக வைத்து உருவாகும் படம் எனும் சிறப்பை, இப்படம் பெற்றுள்ளது. இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் 15 நாள் ரிகர்சலுக்கு பிறகு, வெறும் 6 நாட்களில் படமாக்கப்பட்டது. படத்தில் மொத்தமாக 5 லிருந்து 6 சீக்குவன்ஸ் காட்சிகளே உள்ளது. ஒவ்வொரு காட்சியும் திரையில் 20 நிமிடங்கள் வரை வரும்படி அமைக்கப்பட்டுள்ளது.
ஹன்சிகாவின் இந்த திரைப்படம் திரை நேரத்தில், மிகச்சரியாக 105 நிமிடங்களில் கதையின் சம்பவங்கள் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களிலும் இப்படத்தினை திரையிட திட்டமிட்டுள்ளனர்.
மேலும் இப்படத்தில் குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் என்னவெனில், ஒரு கதாப்பாத்திரத்தினை கொண்டு, முழுப்படமும் ஒரே ஷாட்டில் வரும்படியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முழு படமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஹன்சிகாவின் 53வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை ராஜா துஷா இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். கிஷோர் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழில் ஏற்கனவே ஒரே கதாபாத்திரத்தை மட்டும் கொண்டு நடிகர் பார்த்திபன் நடிப்பு மற்றும் இயக்கத்தில் ஒத்த செருப்பு படம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டிலும் 2019ம் ஆண்டு 1917 என்ற ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெளியாகி ஏராளமான விருதுகளை குவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.