பூவரசம் பீப்பி, சில்லுக்கருப்பட்டி மற்றும் ஏலே போன்ற படங்களை எடுத்த இயக்குனர் ஹலிதா சமீம், அண்மையில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் தனது உழைப்பு திருடப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஹலிதாவின் குற்றச்சாட்டு:
இதுதொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”ஏலே படத்திற்காக முதன் முதலில் ஒரு கிராமத்து மக்களை படப்பிடிப்பிற்கு தயார் செய்து அதில் அவர்களையும் நடிக்கவைத்து ஷூட்டிங் நடத்தினோம். அதே கிராமத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படமாக்கப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால், நான் பார்த்து, பார்த்து சேர்த்த அழகியல் முழுவதும் இப்படம் முழுக்க திருடப்பட்டுள்ளது. அங்கே ஐஸ்காரர் என்றால் இங்கே பால்காரர். அங்கே செம்புலி என்றால் இங்கே செவலை. அங்கே அமரர் ஊர்தி பின்னே செம்புலி ஓடியது போல், இங்கே மினி பஸ் பின்னே செவலை ஓடுகிறது.
நான் அறிமுகப்படுத்திய சித்திரை சேனன் நடிகர் -பாடகர், ஏலே படத்தில் நடித்த கலைக்குழு பாடகர் பாத்திரம் போலவே, நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் மம்மூட்டியுடன் பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் காட்டப்படும் வீடுகள், பலமுறை பார்த்து பின் நான் படமாக்கப்பட வேண்டாம் என்று நிராகரித்த வீடுகள். இதுபோல், இரண்டு படங்களையும் ஒப்பிட்டு சொல்வதற்கு இன்னும் நிறைய உள்ளன. எனக்காக நான் தான் பேச வேண்டும். தவிர்க்க முடியாமல், நானே பேச வேண்டிய சூழலில் இதைப் பதிவிடுகிறேன். நீங்கள் ஏலே படத்தை நிராகரிக்கலாம். ஆனால் என் சிந்தனையும், நான் தேர்வு செய்த அழகியலும் இரக்கமின்றி திருடப்படும்போது நான் அமைதியாக இருக்கமாட்டேன்" என ஹலிதா சமீம் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஏலே திரைப்படம்:
ஹலிதா ஷமிம் இயக்கத்தில் சமுத்திரகனி மற்றும் மணிகண்டன் இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ”ஏலே”. அப்பா- மகன் இடையேயான பாசத்தை மையாக கொண்டு உருவான இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும், பழனி அருகே உள்ள ஒரு கிராமத்தில் தான் நடைபெற்றது. கிராமத்து அழகியலை தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தாலும், ரசிகர்களிடையே இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை.
நண்பகல் நேரத்து மயக்கம்:
இதனிடையே, ஆமென், அங்காமலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு போன்ற மலையாள படங்கள் மூலம் பிரபலமான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், மம்முட்டி நடிப்பில் உருவான ”நண்பகல் நேரத்து மயக்கம்” திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக சுந்தரம் எனும் கிராமத்து கதாபாத்திரத்தில் மம்முட்டி அப்படியே வாழ்ந்து உள்ளார் என்றே கூறவேண்டும். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஏலே படம் எடுக்கப்பட்ட அதே கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது. இந்நிலையில் தான், ஏலே படத்தில் தான் காண்பித்த அழகியல் முழுவதும் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் திருடப்பட்டுள்ளதாக இயக்குனர் ஹலிதா சமீம் குற்றம்சாட்டியுள்ளார்.