ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் 2022ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் 'வலிமை'. அஜித் நடித்த 60வது திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பு சற்று தூக்கலாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில் வலிமை அப்டேட் என்பது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்தது. அதுவும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூடியதற்கு ஒரு காரணமாக இருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. 



பட்டையை கிளப்பிய துணிவு :


சமீபத்தில் இதே கூட்டணியில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் 'துணிவு'. மாபெரும் வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. துணிவு படம் குறித்து படத்தின் இயக்குநர் ஹெச். வினோத்துடன் நடைபெற்ற நேர்காணலில்  பல விஷயங்களை பகிர்ந்த அவர் வலிமை படம் குறித்தும் பல அறிய தகவல்களை பகிர்ந்தார். 


என்கவுன்ட்டர் செய்வது நல்லதா?


வலிமை மாதிரி ஒரு திரைக்கதை கொண்ட ஒரு திரைப்படத்தை எந்த ஒரு ஹீரோவாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக அதில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள். மக்களுக்கு ஒரு பொது புத்தி ஒன்று உள்ளது. என்கவுண்டர் செய்வதை அவர்கள் விரும்புகிறார்கள். அதனால் என்கவுண்டர் செய்யும் அதிகாரிகளையும் மக்களுக்கு மிகவும் பிடிக்கிறது. ஒரு புல்லட்டில் வேலையை முடிக்கும் சீன்களை கைதட்டி வரவேற்கிறார்கள். வலிமை படத்தின் கிளைமாக்ஸ்  காட்சியில் மக்கள் அனைவரும் அஜித் சார் மீது பூ  போடுவார்கள். அந்த காட்சியை படத்தில் வைக்க ஒரு காரணம் இருக்கிறது. 


கிளைமாக்ஸ் காட்சி:


ஹைதராபாத்தில் ஒரு என்கவுன்ட்டர் ஒன்று நடைபெற்றது. ஒரு பெண்ணை நான்கு பேர் சேர்ந்த கும்பல் பலாத்காரம் செய்த காரணத்தால் அவர்கள் என்கவுண்டர் செய்யப்பட்டார்கள். ஒரு ஆறு மாத இடைவெளியில் அந்த வழக்கை விசாரித்த பிறகு தான் உண்மை தெரியவந்தது. என்கவுண்டர் செய்யப்பட்ட அந்த நான்கு நபர்களும்  நிரபராதிகள். அது ஒரு பொய்யான என்கவுன்ட்டர் என்பதை கண்டுபிடித்தார்கள். அப்பாவி பையன்களை சுட்டுக்கொன்று விட்டார்கள் என்ற வழக்கு தீர்ப்பு வந்தது. அது போல நூற்றுக்கணக்கான பொய்யான என்கவுன்டர்கள் நடைபெற்றுள்ளன. இது போன்ற என்கவுண்டர்களுக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்து வந்தீர்கள் என்றால் ஒரு நாள் ரோட்டில் செல்லும் போது நீங்கள் கூட சுட்டுக்கொல்லபடலாம்.


மக்கள் எந்த இடத்தில் என்கவுண்டர் நடைபெற்றதோ அங்கு சென்று பூ போட்டு வாழ்த்தினார்கள். அதனால் தான் நான் வலிமை படத்தில் அதை கிளைமாக்ஸ் காட்சியில் வைத்தேன். யாருக்கு பூ போட வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காக தான் அந்த காட்சியை நான் படத்தில் வைத்தேன். இது போன்ற பல நுட்பமான விஷயங்கள் வலிமை படத்தில் உள்ளன. அதை கவனிக்கவோ, பேசவோ கூட யாரும் தயாராக இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமான ஒரு விஷயமாக இருந்தது என்றார் இயக்குநர் ஹெச். வினோத்.