இளம் இசையமைப்பாளராக அறிமுகமான நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது திரைப்படங்களில் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் வருகிற ஆக்ஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு “பெருங்காற்றே” என்ற ஆல்பம் பாடலை உருவாக்க உள்ளனர். பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ள இந்த பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து அதில் நடிக்கவும் உள்ளார். ஏ.ஆர்.ராஜசேகர் இந்த பாடலை இயக்குகிறார். இதற்கான அறிமுக நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் நடைப்பெற்றது. அப்போது பேசிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் “ 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த போது ’தேவாரம் ’ தமிழ் பாடல் இசைக்கப்பட்டு , தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 75 வது சுதந்திர தினத்தன்று சுதந்திர தினத்திற்கான பிரத்யேக தனிப்பாடலுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது “ என்றார்.
அதுமட்டுமல்லாமல் பாடலுக்கான காட்சிகளை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை முக்கியமான சில இடங்களில் படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். குறிப்பாக ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த இடம் , ஆசாத் கொலை செய்யப்பட்ட இடம் , வேலூரில் துப்பாக்கிச்சூடு நடந்த இடம் என முக்கியமான சுதந்திர போராட்ட நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாக இந்த பாடல் அமைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “வண்ணங்களால் இணைவோம் “ என்ற கூற்றை அடிப்படையாக கொண்டு, இந்தியாவின் அனைத்து சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் இந்தியாவின் காலாச்சாரங்களை அறிந்துக்கொள்ளும் விதமாக ”பெருங்காற்றே “ பாடல் அமையும் என்றும் தனிப்பாடல் குழுவினர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். இந்த பாடல் சுதந்திர தினத்தை முன்னிட்டு யூடியூப் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.