நடிகர் விக்ரம் - இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் நடிப்பில் இந்தாண்டு மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் விக்ரமின் அடுத்தடுத்த படங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளர். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கவுள்ளார்.
சீயான்61 என தற்காலிக பெயரிடப்பட்டுள்ள இப்படம் 1800 காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படவுள்ளதாகவும், 3டியில் படம் வெளியாகும் என பா.ரஞ்சித் தெரிவித்திருந்தார். மேலும் முதலில் இப்படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் விலக மாளவிகா மோகன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படவுள்ளது. சமீபத்தில் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தூள்,அருள்,மஜா, பத்து எண்றதுக்குள்ள படங்களுக்குப் பின் விக்ரமுடன் நடிகர் பசுபதி இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் சீயான் 61 படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ட்விட்டரில் வெளியாகியுள்ள பதிவில், சீயான்62 படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் எனவும், வெறித்தனமாக இருக்கப்போகும் இந்த படத்தின் இசையில் பணியாற்ற ஆர்வமுடன் இருக்கிறேன். உற்சாகமான காலம் வரவுள்ளது என ஜி.வி.பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தை விநியோகம் செய்த ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மெட்ராஸ் படத்தை தயாரித்திருந்தது. அதன்பின்னர் சீயான் 61 படத்தில் இக்கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.