ஆசிய திரைப்படங்களுக்கான  'ஏசியன் அகாடமிக் க்ரியேட்டிவ் அவார்ட் 2022 விருதுகள்’ அறிவிப்பில் 
நடிகர் குருசோமசுந்தரத்துக்கு சிறந்த முன்னணி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. மின்னல் முரளி படத்தில் அவர் ஏற்று நடித்த வில்லன் கதாபாத்திரத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு இறுதியில் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான டோவினோ தாமஸ் நடிப்பில் சூப்பர் ஹீரோ படமான மின்னல் முரளி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.


நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் நான்கு மொழிகளில் வெளியான இப்படத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் சூப்பர் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.


 






ஷிபு எனும் கதாபாத்திரத்தில் வில்லனாகக் கலக்கிய குருசோமசுந்தரத்தின் கதாபாத்திரம், வில்லன் என்பதைத் தாண்டி மக்களின் அனுதாபங்களையும் பெற்றது.


*இந்நிலையில், ஆசிய நாடுகளின் திரைப்படங்களுக்கான விருதுகள் 'ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்' இந்தப் படத்துக்காக குருசோமசுந்தரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மொத்தம் பதினாறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப் படங்கள் கலந்து கொண்டன.


சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


வரும் டிசம்பர் மாதம் இந்த விருதினை வழங்கும் விழா சிங்கப்பூரில் நடைபெற உள்ளது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ் சினிமாவில் 'ஆரண்ய காண்டம்' படத்தில் அறிமுகமாகி ஜோக்கர், ஜிகர்தண்டா என கவனம் ஈர்த்து சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் குரு சோமசுந்தரம்.  கூத்துப்பட்டறையில் தொடங்கிய இவரது கலை வாழ்வு இறுதியாக வந்த மலையாளப் படமான மின்னல் முரளி மூலம் உச்சம் பெற்றது.


தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களை தன் நேர்த்தியான நடிப்பால் வெளிப்படுத்தும் குருசோமசுந்தரம் தற்போது தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார்.