சன் டிவியில் ஒளிபரப்பாகி மெஹா ஹிட்டான நாதஸ்வரம் சீரியல்  மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 






கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. இயக்குனர் திருமுருகன் இயக்கிய அந்த சீரியலில் அவர் கோபி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் டெல்லி குமார், போஸ் வெங்கட், காவேரி, சேத்தன் , காயத்ரி, சஞ்சீவி, வனஜா என நட்சத்திர பட்டாளமே அந்த சீரியலில் இடம் பெற்றிருந்தது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முதலாக 1000 எபிசோட்களை கடந்த சீரியல் என்ற சாதனையை மெட்டி ஒலி படைத்தது. 


கொரோனா ஊரடங்கில் மெட்டி ஒலி சீரியல் மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு மற்ற சீரியல்களின் டிஆர்பிக்கே சவால் விட்டது. திருமுருகனை அவரது இயற்பெயரை விட மெட்டி ஒலி கோபி என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். மெட்டி ஒலியின் வெற்றி திருமுருகனை வெள்ளித் திரையில் 2 படங்களை இயக்கும் வாய்ப்பை வழங்கியது. மீண்டும் சீரியலுக்கு திரும்பிய அவர் நாதஸ்வரம் என்ற சீரியலை இயக்கினார். 






இந்த சீரியலின் 1000வது எபிசோட் காரைக்குடியில் இருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு கின்னஸ் சாதனைப் படைத்தது. இதனைத் தொடர்ந்து குல தெய்வம், கல்யாண வீடு என தொடர்ந்து சன் டிவிக்கான சீரியல்களை இயக்கியவர் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சீரியல் பக்கம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்நிலையில் சமீபகாலமாக சன் டிவியில் ஹிட் கொடுத்த வாணி ராணி, தெய்வ மகள் ஆகிய சீரியல்களை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கி மறுஒளிபரப்பு செய்கிறது. அந்த வகையில் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் நாதஸ்வரம் சீரியலும் கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குலதெய்வம் சீரியலும் ஒளிபரப்பப்பட உள்ளதால் சீரியல் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.