1953-ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள் தேனி மாவட்டம் வடுகப்பட்டி எனும் கரிசல்காட்டில் கண்டெடுத்த முத்து தான் இன்றைய நம் கவிப்பேரரசு வைரமுத்து. விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீதிருந்த அதீத அன்பின் காரணமாக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பயின்றார். 




 


இலக்கியம் ஈன்றெடுத்த தவப்புதல்வன் வைரமுத்து:


சிறு வயது முதலே தமிழ் இலக்கியத்தில் திழைத்திருந்த வைரமுத்து எழுதிய இலக்கியங்கள் அவருக்கு இலக்கிய உலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை பெற்று கொடுத்தது. வைரமுத்துவின் இலக்கிய படைப்புகளினுள் சிறந்தது இவரது இரட்டை காப்பியங்களான கள்ளிக்காட்டு இதிகாசமும் கருவாச்சி காவியமும் தான். கள்ளிக்காட்டு இதிகாசம் இவருக்கு சாகித்ய அகாடமி விருதை பெற்றுத் தந்தது. அதுமட்டுமின்றி அந்நூல் 22 மொழிகளிலும் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. இவற்றை தவிர வைரமுத்துவின் பேனா, கவிதை தொகுப்புகள், நாவல்கள் என 37 நூல்களை எழுதி தள்ளியுள்ளது.


திரையுலகில் வைரமுத்துவின் படைப்புகள்: 


இலக்கிய உலகில் மட்டுமல்லாம் திரையுலகிலும் கால் பதிக்க வைரமுத்து சற்றும் யோசிக்கவில்லை. 1980 ஆம் ஆண்டு, பாரதிராஜா இயக்கத்தில் வெளியான நிழல்கள் என்ற திரைப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருந்தார் வைரமுத்து. அந்த பாடல்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவே வைரமுத்துவின் முதல் திரைவரிகளே பட்டித்தொட்டி எங்கும் ஒளித்தது. அதன் பிறகு அவரது பேனாவில் திரைப்பாடல் எழுதுவதற்கு மை தீர்ந்து போகவேயில்லை.


நாட்படு தேறல்: 


இளம் தமிழ் நெஞ்சங்களில் பழந்தமிழை அதன் செம்மை மாறாமல் பாய்ச்சும் பொருட்டு வைரமுத்து எடுத்து வைத்துள்ள நவீன கால முயற்சி தான் நாட்படு தேறல். இது 100 பாடல்கள் கொண்ட தொகுப்பாக உருவாகி வருகிறது. ஒவ்வொரு பாடலும் ஒரு சிறுகதை சொல்லும். இந்த 100 பாடல்களில் 100 இயக்குநர்கள், 100 இசையமைப்பாளர்கள் மற்றும் 100 பாடகர்களுடன் சேர்ந்து பாடல்களை வடிக்கிறார் வடுகப்பட்டி கவி வைரமுத்து.


வெற்றிகளும் விருதுகளும்:


 45 ஆண்டுகால திரைவாழ்க்கையில் 7500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள வைரமுத்து, சிறந்த பாடலுக்கான 7 தேசிய விருதுகளை வென்று இதுவரை இந்திய திரையுலகில் எந்த ஒரு பாடலாசிரியரும் அடையாத சிறப்பை பெற்றுள்ளார். இவை தவிர பத்ம ஸ்ரீ, பத்மபூஷன், சாகித்ய அகாதமி விருது என அனைத்து விருதுகளும் அவரது பேனாவிற்கு அடிமை ஆகின.


இவ்வாறு சென்ற இடமெல்லாம் தன் கள்ளிக்காட்டு வாடையுடன் சேர்த்து இலக்கியத்தையும் பாய்ச்சி செல்லும் அமுத விரலர், இந்நூற்றாண்டின் சிறந்த இலக்கிய ஆளுமை கவிப்பேரரசு வைரமுத்து இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தமிழன்பு நிறைந்த வாழ்த்துகள்!