பிக்பாஸ் வீட்டில் இருந்து தான் வெளியேறியதற்கான காரணம் குறித்து டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து பேசி இருக்கிறார். 


விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸின்  6 வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது. இதில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன், சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகமது அசிம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம், விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன்,மைனா நந்தினி ஆகியோர் பங்கெடுத்து இருந்தனர்.




பிக்பாஸ் வீட்டினுள் முதல் ஆளாக சென்ற ஜிபிமுத்து, தன்னுடைய இயல்பான வெகுளித்தனத்தால் ஏராளமான ரசிகர்களை பெற்றார். விளையாட்டிலும் நன்றாகவே விளையாடி வந்த ஜிபி, திடீரென்று  பிக்பாஸ் வீட்டில் இருந்து பாதியிலேயே வெளியாவதாக பிக்பாஸிடம் கோரிக்கை வைத்தார். காரணத்தை கேட்ட போது, எனது மகனை காணாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்றும் தான் வெளியேறியே ஆக வேண்டும் என்று கூறினார். அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜிபி முத்து வெளியேற்றப்பட்டார்.


இந்த நிலையில் கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஜி.பி.முத்துவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர்,  “ எனது மகனுக்கு உடல் நிலை சரியில்லை அதுதான் காரணம். அவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவனை மருத்துவமனையில் காண்பித்து இருந்தேன். அப்போதுதான் எனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதனால் நான் அப்படியே பிக்பாஸ் வீட்டிற்கு வந்து விட்டேன். அதனால் உள்ளே இருந்த எனக்கு, மகன் உடல்நிலை குறித்த கவலை தொடர்ந்து இருந்தது.




அதனால்தான் நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தேன். இப்போது அவன் நன்றாக இருக்கிறான். பிக்பாஸ் அனுபவம் எனக்கு புதுவிதமாக இருந்தது. கமல்ஹாசனை சந்தித்தது எனக்கு கிடைத்த பாக்கியம். தற்போது ஐந்து திரைப்படங்களில் நடித்து வருகிறேன். நடிகை சன்னி லியோனுடன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. நான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ சொன்ன உடன் அவர் தன்னை பார்த்து க்யூட் என கூறிய போது நான் சிலிர்த்து போனேன்.” என்று பேசினார்.