நடிகர் மணிகண்டன், பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் போல் பிரபலமானவர் என இயக்குநர் பாலாஜி சக்திவேல் புகழ்ந்துள்ளார்.


குட்நைட்:


நடிகர் மணிகண்டன், ‘முதல் நீ முடிவும் நீ’ பட நடிகை மீதா, நடிகர் ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ‘குட் நைட்’. குறட்டைப் பிரச்னையால் ஒரு நபரும் அவரது குடும்பத்தினரும் சந்திக்கும் பிரச்னைகளை காமெடி கலந்து ஃபீல் குட் திரைப்படமாக புதுமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 


இந்தப் படம் கடந்த மே 12ஆம் தேதி வெளியான நிலையில், நான்கு நாள்களில் சுமார் 1.90 கோடி வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நான்கு படங்களில் குட் நைட் படமே நல்ல வரவேற்பைப் பெற்று பாசிட்டிவ் கமெண்டுகளை இணையத்தில் அள்ளி வருகிறது.


நல்ல நடிகர்:


இந்நிலையில், முன்னதாக நடைபெற்ற இப்படத்தின் வெற்றிவிழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் மணிகண்டனைப் புகழ்ந்து பேசியுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது. தயாரிப்பாளர்கள் நான்கு பேர் இணைந்து குறட்டை எனும் இந்த விஷயத்தை உள்வாங்கி பிறர் ரசிக்கும் விதமாக வழங்கியதற்கு வாழ்த்துகள். அதேபோல் கலை இயக்குநர் ஒரு பகுதியை அப்படியே தோட்டமாக மாற்றினார். ஹீரோவும் ஹீரோயினாகவும் சந்தித்துக் கொள்ளும் காட்சி இது.  அதேபோல் எனக்கு மிகவும் வியப்பான விஷயம் இது. ஒரு நல்ல நடிகர் நல்ல நடிகர் எனப் பெயரெடுப்பார்.


ஆனால் பிரபலமான நடிகர் என பிரபலமான படத்தில் நடிக்கும்போதுதான் பெயர் எடுப்பார். மணிகண்டன் என்பவர் ரொம்ப நுணுக்கங்கள் கொண்டு சில்லறையாக நடிப்பவர். நுணுக்கங்களை மிக அழகாக சொல்பவர். செட்டிலேயே இவர்கள் அப்படிதான் பேசுவார்கள். கதையில் ஒன்றி அதை செய்தால் தான் வரும். எனக்கு இரண்டு, மூன்று காட்சிகளிலேயே இப்படம் சிறப்பாக வரும் என எனக்குத் தெரிந்துவிட்டது.


நவாசுதீன் சித்திக்:


மணிகண்டனை தொடக்கத்தில் சிறு, சிறு ரோல்கள் நடித்தது முதல் நான் கவனித்து வருகிறேன். அவர் ஒரு மிகச்சிறந்த நடிகர். இந்தியில் இருக்கும் நடிகர் நவாசுதீன் சித்திகைப் போல் சிறப்பாக அனைத்து கதாபாத்திரங்களையும் செய்யக்கூடியவர். ஒரு பிரபல ஹீரோ ஆவதற்கும் அதனை கலைத்தன்மையுடன் செய்வதற்குமான திறமை அவருக்கு இருக்கிறது. அதனால் அவரது கரியர் மிகப்பெரும் உச்சத்தைத் தொடும் என எனக்கு நம்பிக்கை உள்ளது” எனப் பேசியுள்ளார்.


மேலும் படிக்க: Manobala: "வெளிய சொல்ல முடியாத சேட்டை.. அழாமல் பேசுவது ரொம்ப சிரமம்.." மனோபாலா நினைவால் உருகிய மன்சூர், டெல்லி கணேஷ்..!