லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நெல்லை சந்திப்பு ராம் சினிமாஸ் திரையரங்கில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையின் கெடுபிடி காரணமாக அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து விசில் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபடியே படத்தை கண்டு களிக்க திரையரங்கத்திற்குள் சென்றனர். 


இதனிடையே ரசிகர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், லியோ திரைப்படத்தை வரவேற்கும் விதமாகவும் வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் சார்பில் அதிநவீன தொழில் நுட்பமான அக்மென்ட்டட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர் விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து தங்களது மொபைல்களில் புகைப்படம் எடுத்துச் சென்றனர். குறிப்பாக சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜயுடன் நின்று தங்களுக்கு பிடித்த தோற்றத்தில் புகைப்படம் எடுத்து சென்றனர். அதற்காக  பல்வேறு வகைகளில் விஜயின் புகைப்படங்கள் ஏ ஆர் தொழில்நுட்பத்தில் இடம் பெற செய்யப்பட்டுள்ளது. இதில் ரசிகர்கள் தங்களுக்கு  நடிகர் விஜயின் எந்த படம் பிடித்துள்ளதோ அதனை தேர்ந்தெடுத்து புகைப்படத்தை  தங்களது மொபைல் போனில் இருக்கும் கியூ ஆர் ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்து பின்னர் அந்த புகைப்படத்தின் அருகாமையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ஆர்வமுடன் இதனை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். ஏ ஆர் தொழில் நுட்பத்தில் இதுபோன்ற வசதிகள் இதுவரை வேறு எங்கும் திரைப்படங்கள் வெளியிட்டின் போது பயன்படுத்தாத நிலையில் தமிழகத்தின் முதன்முறையாக நெல்லையில் உள்ள திரையரங்கில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக ஏ ஆர் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.