விளையாட்டு சமையல், பைக் பயிற்சி என தனது தனிப்பட்ட வாழ்க்கையில் பயங்கர பிஸியாக இருந்து வருகிறார் நடிகர் அஜித் குமார் (Ajith Kumar).


அஜித் குமார்


நடிகர் அஜித் குமார் விடாமுயற்சியின் படப்பிடிப்பு முடித்து சென்னை வந்து சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரனுடனான அவரது அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியது. ‘குட் பேட் அக்லி ‘ என்று இந்தப் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டது. தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததா, இல்லையா என்பது குறித்த எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், அடுத்த படத்தின் அப்டேட் வந்தும் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது. 


மருத்துவமனையில் அஜித்


இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மூளையில் அறுவை சிகிச்சை என்று பலவிதமான வதந்திகள் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவின. அஜித் ஒரு வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்கு சென்றதாகவும் பரிசோதனையில் அவருக்கு காதருகே ஒரு சிறிய புடைப்பு இருந்ததாகவும் தெரியவந்தது. அரை மணி நேர அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார் அஜித் குமார்.


பிரியாணி சமைப்பது முதல் பில்லியர்ட்ஸ் வரை






மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அஜித் குமார் தற்போது மீண்டு தனது பைக்கில் பயணத்தை தொடங்கியிருக்கிறார். மேஜையின் மேல் கால்போட்டு ஓய்வெடுப்பது, இளம் பைக் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது , நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது என  ஒவ்வொரு நாளும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானபடி இருக்கின்றன.


தனது நண்பர்களுடன் பயணத்தைத் தொடரும் அஜித் குமார் அவர்களுக்கு பிரியானி சமைத்துக் கொடுக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் ஸ்டைலாக அஜித் குமார் பில்லியர்ட்ஸ் விளையாடும் வீடியோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் அஜித் தனது திட்டங்களில் உறுதியாக இருக்கிறார். வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம்.