இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு மார்ச் 22 ஆம் தேதி பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர். படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த நிலையில் கீரவாணி இசையமைத்திருந்தார். இதனிடையே கோல்டன் குளோப் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இரண்டு பிரிவுகளில் ஆர்.ஆர்.ஆர் படம் இடம் பெற்றிருந்தது.
அதன்படி ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலும் இடம் பெற்றிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்றைய தினம் Hollywood Foreign Press Association சார்பில் கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
இவ்விழாவில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்., இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக நடிகை ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி, கன்னடத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ரிஷப் ஷெட்டியின் காந்தாரா, குஜராத்தி படமான செல்லோ ஷோ ஆகியப் படங்கள் விருதுக்கு அனுப்பப்பட்ட நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படம் மட்டுமே நாமினேஷனில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் விருது கிடைக்குமா?
அகாடமி அவார்ட்ஸ் என அழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழாவின் 95வது நிகழ்வு வரும் மார்ச் மாதம் 12 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் ஆர்.ஆர்.ஆர். படம், சிறந்த இயக்குநர் (ராஜமெளலி), சிறந்த நடிகர் (ஜூனியர் என்.டிஆர், ராம் சரண்), சிறந்த துணை நடிகர்(அஜய் தேவ்கன்), சிறந்த பாடல் ( நாட்டு நாட்டு), சிறந்த பின்னணி இசை (கீரவாணி), சிறந்த படத்தொப்பாளர் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒலி அமைப்பு (ரகுநாத் கெமிசெட்டி, போலோ குமார் டோலாய், ராகுல் கர்பே), சிறந்த திரைக்கதை ( விஜயேந்திர பிரசாத், ராஜமெளலி, சாய் மாதவ்), சிறந்த துணை நடிகை ( ஆலியா பட்), சிறந்த ஒளிப்பதிவு ( செந்தில் குமார்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு (சாபு சிரில்), சிறந்த ஆடை அமைப்பாளர் ( ராம ராஜமெளலி), சிறந்த சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனையாளர் (நல்ல ஸ்ரீனு, சேனாபதி ), சிறந்த காட்சி அமைப்பு (ஸ்ரீனிவாஸ் மோகன்) ஆகிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது.
இதனையடுத்து ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் இடம் பெற்றது. ஆஸ்கர் விருதுகளின் இறுதிப்பட்டியல் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.