சிரஞ்சீவி , சல்மான் கான் , நயன்தாரா என மூன்று மொழி சூப்பர் ஸ்டார்கள் திரை பகிர்வில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் ‘ காட் ஃபாதர்’ அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, ஜெயம் ரவியின் அண்ணனும் , இயக்குநருமான மோகன் ராஜா இயக்குகிறார்.  இந்த திரைப்படம் இன்னும் இரண்டே தினங்களில் அதாவது அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் டிரைலர் வெளியான நிலையில் , சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்கள் குறித்தான BTS கிளிம்ஸை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை நயன்தாராவுடன் திரைக்கும் பின்னால் எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்திருக்கிறார். காட் ஃபாதரில் அரசியல்வாதியாக களமிறங்கும் நயன்தாரா , தலை வாரிக்கொள்வது , மேக்கப் போடுவதில் இருந்து வீடியோ துவங்குகிறது.







பின்னர்  சிரஞ்சீவியுடன் சில காட்சிகள் குறித்து ஆலோசிக்கும் நயன்தாரா , பின்னர் அவருடன் இணைந்து நடித்த காட்சிகளும் அந்த க்ளிம்ஸ் வீடியோவில் இடம்பிடித்துள்ளது.  இறுதியில் நயன்தாரா சத்ய பிரியா ஜெயதேவாக நடித்துள்ளார் என்பதையும்  வீடியோ காட்டுகிறது. படத்தில் மெகாஸ்டார் மாஸ் லீடர் பிரம்மாவாக நடித்துள்ளார்.  காட்ஃபாதரில் சூப்பர் ஸ்டார்ஸ் தவிர சத்யதேவ், லிகர் இயக்குனர் பூரி ஜெகநாத், கங்கவ்வா, சுனில், பிரம்மாஜி மற்றும் திவி வத்யா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.







காட்ஃபாதர் பிரித்திவிராஜ் இயக்கத்தில், மோகன் லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘லூடிஃபர்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டுகளுக்கு பிறகு  சொந்த ஊருக்குத் திரும்பும் ஒரு வெகுஜனத் தலைவர்தான் பிரம்மா. அவரை சாமானியர்கள் ஆதரித்தாலும் சிலருக்கு அவரின் வருகை பிடிக்கவில்லை. இதனை சுற்றி நடக்கும் த்ரிலிங்கான கதைக்களம்தான் ‘காட்ஃபாதர்’ திரைப்படத்தின் ஒன்லைன்.ஆர்பி சௌத்ரி மற்றும் என்வி பிரசாத் ஆகியோர் இப்படத்தை பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள், கொனிடேலா சுரேகா இதை வழங்குகிறார்கள். மோகன் ராஜா கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து, 'வேலைக்காரன்' படத்தை இயக்கியதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.