நடிகர் விஜய் நடித்துள்ள "The Greatest of All Time"  படத்தின் ரிலீஸ் தேதியை ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


பிகில் படத்துக்குப் பின் ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் விஜய்யுடன் 2வது முறையாக இணைந்துள்ள படம்  "The Greatest of All Time". சுருக்கமாக GOAT என குறிப்பிடப்படுகிறது. ரசிகர்கள் நீண்ட வருடங்களாகவே வெங்கட் பிரபு - விஜய் கூட்டணி இணைய வேண்டும் என தெரிவித்து வந்தனர். அந்த வகையில் GOAT படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். 






மேலும் பிரபுதேவா, பிரஷாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, யோகிபாபு, விடிவி கணேஷ், அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி அமரன், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு, பார்வதி நாயர் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் GOAT படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கடந்தாண்டு விஜயதசமியை முன்னிட்டு கோட் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புதுபுது போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. ஹாலிவுட் பாணியிலான மேக்கிங், உளவுத்துறையினர் பற்றிய கதை என இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பா- மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கும் விஜய், மகன் கேரக்டருக்காக தாடி, மீசை இல்லாமல் வித்தியாசமாக காணப்பட்டார். 


ஏற்கனவே வெங்கட் பிரபு நடிகர் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் 2011 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியிருந்தது. மங்காத்தா படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்த வகையில் "The Greatest of All Time" படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.