கோட் பட அப்டேட் கேட்டு தன்னை திட்டிய விஜய் ரசிகருக்கு இயக்குநர் வெங்கட் பிரபு கொடுத்துள்ள பதில் வைரலாகி வருகிறது.


கோட்


நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரபுதேவா, பிரஷாந்த், சினேகா, மோகன், லைலா, மீனாக்‌ஷி செளதரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டவர்கள் நடித்து வருகிறார்கள்.


யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தந்தை மகன் என இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். மேலும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக இப்படத்தின் டீ ஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து கோட் படத்தின் அடுத்த அப்டேட் எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.


முதல் பாடல் எப்போது


 கோட் படத்தின் துவக்கம் முதல் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு தொடர்ச்சியாக ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். ரசிகர்களின் ட்வீட்களுக்கு பதில் சொல்வது, அப்டேட்ஸ் கொடுப்பது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அதே நேரத்தில் ரசிகர்களிடம் இருந்து வரும் உதாசீனப்படுத்தும் வகையிலான நடத்தைகளுக்கு ஏற்றபடியும் பதில் கொடுத்து வருகிறார் வெங்கட் பிரபு . கடந்த வாரம் ரசிகர் ஒருவர் கோட் படத்தின் முதல் பாடலை வெளியிட வாய்ப்பிருக்கிறதா என்று எக்ஸ் தளத்தில் கேட்டிருந்தார். இதற்கு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு  'To Early ' என்று பதிலளித்திருந்தார். வெங்கட் பிரபு இதை சொல்லி ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் ஒருவர் ’சொல்லியே ஒரு வாரம் ஆச்சு’ என்று வெங்கட் பிரபுவை ஆபாசமாக திட்டி அப்டேட் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு “ நானே சொல்லலாம்னுதான் இருந்தேன் , இப்போ இதுக்கு மேல எப்டி சொல்றது நீங்களே சொல்லுங்க” என்று கோபத்தை கட்டுப்படுத்தி  கூலாக பதிவிட்டுள்ளார்.