2005ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான ஒரு திரைப்படம் ஒரு வித்தியாசமான முயற்சியால் பலரது பாராட்டை பெற்றது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின், நயன்தாரா நடிப்பில் வெளியான கஜினி திரைப்படம் தான் அது. இப்படம் வெளியாகி இன்றுடன் 17 வருடங்களை கடந்து விட்டது. இன்றும் இதில் நடித்த சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தை மறக்க முடியாது. 


 



 


சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம்:


ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்ற ஒன்றை பற்றி மக்களுக்கு பதிய வைத்த ஒரு திரைப்படம் "கஜினி". ஒரு அழகான காதல் கதையில் திடீரென நடக்கும் விபரீதத்தால் காதலியையும் இழந்து நினைவையும் இழக்கும் ஹீரோ எப்படி பழிவாங்குகிறார் என்பது தான் படத்தின் கதை. படத்தின் பிளாஷ்பேக் கதை முதல் கிளைமாக்ஸ் வரை அனைத்துமே அப்லாஸ் பெற்றது. இப்படம் தமிழில் சூப்பர் ஹிட் திரைப்படமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. அது வெற்றி பெறவே 2008ம் ஆண்டு கஜினியின் ஹிந்தி ரீமேக் திரைப்படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்க அதுவும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 


 






 


கல்பனாவாக அசினும், சஞ்சய் ராமசாமியாக சூர்யாவின் நடிப்பும் அபாரம். கிட்டத்தட்ட 12 நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் சொல்லப்பட்டு யாருமே ஒத்துக்கொள்ளாத நிலையில் 13 வது நடிகரான சூர்யாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த 12 நடிகர்களில் அஜித் மற்றும் மாதவனும் அடங்குவார்கள். இப்படத்திற்காக உப்பு சேர்க்காத உணவு, மொட்டை தலை, சிக்ஸ்பேக் என கடினமாக உழைத்துள்ளார் சூர்யா. அதிலும் நினைவை இழந்த பிறகு அவர் அங்கும் இங்கும் பார்க்கும் பார்வையே நம்மை அசையாமல் கட்டிப் போட்டு விடும் அளவிற்கு உறைய வைத்தது. அது ஒரு புறம் என்றால் ஒரு கோடீஸ்வரர் கதாபாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தி இருந்தது. என்ன ஒரு ட்ரான்ஸ்பர்மேஷன்.  
 


 






 


ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். சஞ்சய் ராமசாமி உடன் காதல் என ரீல் ரீலாக அனைவரின் காதில் பூ சுத்தும் அசின் அவரின் துடுக்கான பேச்சு, கொஞ்சும் அழகு இவற்றை எல்லாம் மீறி அவர் கொல்லப்படும் போது அவரின் நடிப்பு என அப்படியே ஸ்கோர் செய்து விடுகிறார். கடைசி வரையில் சஞ்சய் ராமசாமி யார் என்று தெரியாமலே இறந்து போவது கண்களை கசிய செய்தது. 


வழக்கமான பழிவாங்கும் கதை தான் என்றாலும் சற்றே எதிர்பார்க்காத ஒரு திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்தார் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். படத்திற்கு பக்க பலமாய் இருந்தது சூர்யா, அசின் நடிப்பு, பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு.