இசையை ரசிக்கும், அந்தந்த நாள் அப்டேட்களை செல்போல் திரையில் விரல்களால் ஓட விடும் நிகழ்கால ஆட்கள் பலருக்கும் கூட பிரதீப்குமார் அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் பாடல்களை வரிசைக்கட்டினால் அவர் உங்களுக்கு நெருக்கமானவரே.






மேடைப்பாடகர், சுதந்திர இசைக்கலைஞர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பயணிக்கும் பிரதீப்குமார் மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர். சந்தோஷ் நாராயணனின் தொடக்ககால நண்பன் என்பதால் சந்தோஷின் இசையும், பிரதீப்பின் குரலும் கூட சிறந்த நண்பர்கள் தான். ஆசை ஓர் புள்வெளி பாடலில் ஓ ரிங்காரமே என்ற இழுவையில் நாம் குரலோடு இணைந்தே போவோம். குக்கூ படத்தில் ஆகாசத்த பாடல், பீட்சா படத்தில் மோகத்திரை,மெட்ராஸ் படத்தில் ஆகாயம் தீப்பிடிச்சா, காலாவில் கண்ணம்மா, கபாலி மாயநதி என சந்தோஷ் இசையில் பிரதீப் நிகழ்த்திய மாயாஜாலங்கள் இன்னும் உண்டு. இருவருக்கும் இடையே இசையமைப்பாளர், பாடகர் உறவு மட்டுமில்லை. இருவரும் வாடா போடா நண்பர்கள். சென்னையில் ஒரே அறையில் தங்கி படித்து, இசையமைத்து பாடித்திரிந்த ஒரு கூட்டுப்பறவைகள். அதனால்தான் என்னவோ என்பதால் அவர்களுக்கு இடையான கெமிஸ்ட்ரி பட்டையை கிளப்பும். 





தனது குரலில் காதலை வழியவிடுவது மட்டுமல்ல, சோகத்தை பிரதீப்பின் குரல் எளிதாகவே நமக்குள் ஊடுறுவ வைக்கும்.  'ஆகாயம் தீப்பிடிச்சா நிலா தூங்குமா' பாட்டில் மனதை கசிய வைக்கும் குரலாக, மரகதநாணயத்தில் வரும் 'நீ கவிதைகளா' பாடலில் உருக வைக்கும் குரலாகவும் சோகத்தை கடத்துவார் பிரதீப். விக்ரம் வேதா படத்தில் வரும் 'போகாத என்னவிட்டு' பாடலுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. குறிப்பாக காலாவில் வரும் 'கண்ணம்மா' பாடல், குரலின் ஏற்ற இறங்களே காதலை காணாதவர்களுக்கும் காதல் பிரிவை கொண்டு வந்து உணர வைக்கும்.





அதேபோல் காதல் இல்லாத மனங்களையும் காதல் உணர வைத்து சேம் சைட் கோல் அடிப்பார் பிரதீப். மெஹந்தி சர்கஸில் வரும் 'கோடி அருவி கொட்டுதே' பாடல். அந்த பாடலைக் கேட்டால் நிச்சயம் கேட்பவர்களின் மனதில் கோடி அருவி கொட்டத்தான் செய்யும். கபாலி படத்தில் வரும் 'நெஞ்செமெல்லாம்' என தொடங்கும் 'மாயநதி' பாடலுக்கு உருகாத உள்ளங்கள் உண்டா என்ன? பீட்சா படத்தில் வரும் ’மோகத்திரை’ பாடலைக் கேட்டால் மழை பெய்யும் விஷுவலுக்குள் நாமும் நனைந்துகொண்டு இருப்போம். முண்டாசுப்பட்டி படத்தில் வரும் 'காதல் கனவே’ பாடல்,குக்கூ படத்தின் ’ஆகாசத்த’ பாடல், மேயாதமான்  படத்தின் ’என்ன நான் செய்வேன்’என காதலை வளர்த்த பெரும் பங்கும் பிரதீப் குரலுக்கு உண்டு.




உலகைத் தேடும் ராம்க்கு, ’தி லைப் ஆப் ராம்’ என்ற பாடலை 96 படத்தில் பாடி ரசிக்க வைத்திருப்பார் பிரதீப். ’இரு காலின் நடுவிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா’ என்ற வரியில் பிரதீப் குரலுக்கும், காட்சி அமைக்கும் நாம் வாழ்க்கையின் ரசனையை உளமாற உணர்ந்திருப்போம். 




சோகம், காதல், பிரிவு , மகிழ்ச்சி என அனைத்து உணர்ச்சியும் உருகும் குரலில் கொடுக்கும் பிரதீப்குமார் தன்குரலை பதிவு செய்துகொண்டே இருக்க வேண்டும். இசையில் எல்லையின்றி, பல இசையமைப்பாளர்களின் ட்யூனுக்கு பிரதீப்பின் இனிய குரல் பதிவாக வேண்டும். இசையமைப்பாளராகவும், சுதந்திர இசைக்கலைஞனாகவும், பாடகராகவும் இன்னும் பல உயரம் தொட வேண்டும். இதற்கு மேல் இசை ரசிகர்களுக்கு என்ன ஆசை உண்டு? பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதீப்குமார்.