மறைமலை நகர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.



செங்கல்பட்டு மாவட்டம் காவனூர் பகுதியைச் சேர்ந்தவர் வீரா(28), இவர் மறைமலை நகரிலுள்ள தனியார் காஸ் ஏஜென்சியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் தேதி காலை இவருக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், வீட்டை காலி செய்து, வேறு இடத்திற்கு மாற்றி, பொருட்களை எடுத்துச் செல்ல வேலை இருப்பதாக அழைத்துள்ளார்.



இதனால் தனது டாடா ஏசி வாகனத்தில் புறப்பட்டுச் சென்ற வீராவை, பொத்தேரி அருகே, அடையாளம் தெரியாத நபர்கள் வழிமறித்து சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில் வீரா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல் நிலைய போலீசார் வீராவின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்நிலையில்  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நீதிமன்றத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1ல் நீதிபதி தாயுமானவர் முன்னிலையில்,செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பாவேந்தர் சாலையை சேர்ந்த பஞ்சாட்சரம் மகன் சுகுமார்(33), புதுச்சேரி சஞ்சீவி நகர் சீனிவாசன் மகன் மணிகண்டன்(36), கடலூர் நெல்லிக்குப்பம் திருக்கண்டீஸ்வரம் பகுதியை சேர்ந்த திருவேங்கடம் மகன் தினகரன்(24), மற்றும் புதுச்சேரி பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்த செல்வநாதன் மகன் செல்வமணி (20), ஆகிய 4 பேரும் சரணடைந்தனர். இதுகுறித்து மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திண்டிவனம் வந்த போலீசார் சரணடைந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்திவருகின்றனர் . போலீஸ் விசாரணைக்கு பிறகே கொலைக்கான உண்மை காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.