நடிகர் விஜயின் 67 ஆவது படத்தில் நடிப்பது பற்றி இயக்குநர் கெளதம்மேனன் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் திரைப்படங்களுக்கு எப்பொழுதுமே எதிர்பார்ப்பு அதிகம். தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கும் விஜய், அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படம் அவரது ரசிகர்களால் ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது. பெயர் வைக்கப்படாத இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.
இந்தப்படத்திற்கான ஸ்கிரிப்ட் சம்பந்தமான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப்படத்தில் நடிகைகள் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகின. மேலும் நடிகை சமந்தாவை வில்லியாக நடிக்க வைப்பதற்கும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் லோகேஷ் கனகராஜ் கொடுத்த பேட்டி ஒன்றில், நடிகர் மன்சூர் அலிகான் இந்தப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதை உறுதி செய்தார். இதைத்தவிர நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்க பிரித்விராஜ், சமந்தா, அர்ஜூன்,கெளதம் மேனன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் அண்மையில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் கெளதம் மேனன் இது குறித்து பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது “ ஆம் லோகேஷ் என்னை அழைத்தார். தளபதி 67 -ல் ஒரு ரோல் இருக்கிறது நடிக்கிறீர்களா என்று கேட்டார். அதன் பின்னர் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ‘பத்துதல’ படத்தில் சிலம்பரசனுக்கு வில்லனாக நடிக்கிறேன்” என்றார்.
முன்னதாக தளபதி 67 -ல் பாலிவுட் நடிகர் சஞ்சய் சத் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு 10 கோடி சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. அதே போல 1940 களில் வரும் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிப்பதாகவும், இந்தப்படத்தில் பாட்ஷா படத்தில் ரஜினி வருவது போல நடிகர் விஜய் வருவதாகவும் தகவல் வெளியானது.
முன்னதாக ‘கைதி’ ‘மாஸ்டர்’ ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் இணை கதாசிரியராக பணியாற்றிய ரத்னகுமார் இந்தப்படத்திலும் லோகேஷூடன் இணைந்து பணியாற்றுகிறார். அண்மையில் ஜில் ஜங் ஜக் படத்தின் இயக்குநர் தீரஜ் வைத்தி லோகேஷ் மற்றும் ரத்னகுமாருடன் இருப்பது போன்ற போட்டோவை பகிர்ந்தார். இதன் மூலம் இந்தக்கூட்டணியில் அவரும் இணைகிறார் என்ற தகவலும் திரைவட்டாரத்தில் பேசப்பட்டன.