தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு அமைச்சர்கள் எல்லாம் சைலண்ட் மோடிற்கு போய்விட்டார்கள். தலைமைச் செயலகத்திலும் பலரை பார்க்க முடிவதில்லை. தேர்தல் பணியாற்றிய களைப்பில் ஓய்வெடுக்கச் சென்றாலும் சிலரது வயிற்றில் புளி கரைந்துக்கொண்டிருக்கிறது. அதற்கு காரணம், அமைச்சரவையில் மறுபடியும் ஒரு மாற்றத்தை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராகியிருப்பதுதான்.


’40 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும் என்பது மு.க.ஸ்டாலினின் உத்தரவு’


கடந்த 2019ல் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி, தேனி தவிர்த்து 38 தொகுதிகளிலும் வென்றது. இப்போது திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. கடந்த தேர்தலை காட்டிலும் புதுச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகளில் திமுக ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 40க்கு 40 என்பதைதான் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களுக்கு முதல்வர் வலியுறுத்தி வந்தார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசியபோது கூட, உங்களுக்கு பொறுப்புள்ள தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்தால் உங்கள் பதவியையும் இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.


’உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் – அதிர்ச்சியில் அமைச்சர்கள்’


அதன்படி, தேர்தல் முடிந்த கையோடு உளவுத்துறை ரிப்போர்ட்டையும் கேட்டு வாங்கிய முதல்வர் ஸ்டாலின், வெற்றி வாய்ப்பு கஷ்டம் என்ற தொகுதிகளின் பட்டியலை படித்த பிறகு அந்த தொகுதிகளுக்கு பொறுப்புள்ள அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களை அழைத்து பேசியுள்ளார். அன்று அவர் பேசியதான் அமைச்சர்கள் வயிற்றில் இன்று வரை புளி கரைந்துக்கொண்டிருக்கிறது. எக்ஸாம் எழுதிவிட்டு, ரிசல்ட்டிற்காக காத்திருக்கும் மாணவர்களை போல, தேர்தல் முடிவுகளுக்காக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த அமைச்சரவையே காத்துக் கிடக்கிறது.


’பதவி இழப்பும் நடக்கலாம், கூடுதல் பொறுப்பும் கிடைக்கலாம்’


அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றால் அந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்போ அல்லது வேறு முக்கிய துறையோ ஒதுக்கவும், வெற்றி வாய்ப்பை இழந்தால் அந்த தொகுதியின் பொறுப்பு அமைச்சர்களின் பதவியை தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கவும் முதல்வர் ஸ்டாலின் இப்போதே தாயாராகிவிட்டார். உளவுத்துறையின் ரிப்போர்டை வைத்தும் தன்னுடைய கட்சி நிர்வாகிகள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை அடிப்படையிலும் இந்த மாற்றத்தை ஏற்படுத்த ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார். அதே நேரத்தில், தற்போதைய ரிபோர்டுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் வந்தால், சில அமைச்சர்களின் தலை தப்பிக்கும். இல்லையென்றால், அவர்கள் மாற்றப்படுவது உறுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.


’உளவுத்துறை ரிப்போர்ட் சொல்வது என்ன?’


13 தொகுதிகளில் திமுக வெற்றி வாய்ப்பு கடினமாக இருக்கும் என்று உளவுத்துறை உள்ளிட்ட திமுக சார்பு நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதனால், அந்த 13 மாவட்டங்களை கவனித்த பொறுப்பு அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் கிலியில் உள்ளனர். அதே நேரத்தில் எந்தெந்த முக்கிய நிர்வாகிகள் இந்த தேர்தலில் சரியாக பணியாற்றவில்லை, உள்ளடி வேலைகளை பார்த்தவர்கள் யார் யார் ?, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், ஒப்புக்காக வேலை பார்த்தவர்கள் எல்லாம் யார் என்ற டீட்டெய்ல்ட் விவரங்களும் முதல்வர் ஸ்டாலின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன.


’கட்சி கட்டமைப்பிலும் மாற்றம் செய்ய மு.க.ஸ்டாலின் திட்டம்’


அதனால், அமைச்சரவையில் மட்டுமில்லாது கட்சி நிர்வாகத்திலும் பெரிய மாற்றத்த்தை திமுக தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் உடனடியாக செய்ய முடிவு எடுத்திருக்கிறார். ஏனென்றால், அடுத்த 2 வருடங்களில் சட்டமன்ற தேர்தலை திமுக சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போதே, இந்த ஓட்டைகளை அடைத்துவிட்டால், 2026 தேர்தலை மீண்டும் நம்பிக்கையோடு எதிர்க்கொள்ளலாம் என்பது அவரது கணக்காக இருக்கிறது.