வாரிசு படத்தை அடுத்து நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் 67ஆவது படமான இது, லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைந்துள்ள தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்நிலையில், இப்படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தளபதி 67-ல் கெளதம் வாசுதேவ் மேனன்:
இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூன்று பேரும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில், கெளதம் வாசுதேவ் மேனனிடம் “லோகேஷ் கனகராஜ் படத்தில் நீங்கள் நடித்துள்ளீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு முறை லோகேஷ் கனகராஜை பார்த்தார். லோகேஷ் கனகராஜ், “சொல்லுங்க சார்..” என்றவுடன், “அமா..அவரு படத்துல நடிச்சிருக்கேன்” என தளபதி 67 படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார், ஜி வி எம்.
மன்சூர் அலிகான் வில்லன்?
தமிழ் திரையுலகில், வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான். இவரும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான், ஆரம்பத்தில் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளதாகவும், சமீப காலமாக எந்த படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது என கூறினார். மேலும், தற்போது விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். விஜய்யின் படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடக்கம்!
லேகேஷ், விக்னேஷ் சிவன் மற்றும் ஜி.வி.எம். ஆகியோர் கலந்து கொண்ட நேர்காணலில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு லோகேஷ், ஜனவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவித்தார்.
100% லோகேஷ் கனகராஜ் படம்:
விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்ப்பை பெற்றாலும், விமர்சனத்தில் ரசிகர்களிடையே செம அடிவாங்கியது. ரசிகர்கள் பலர், இது லோகேஷ் கனகராஜின் படம் போலவே இல்லை எனவும், லோகேஷ் தங்களை ஏமாற்றிவிட்டதாகவும் மாஸ்டர் படம் குறித்த பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.
இதனால், தளபதி 67 படத்தின் கதையில், முழுக்க முழுக்க லோகேஷ் டச் இருக்குமா என்ற சந்தகம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நிலவி வந்தது. இது குறித்த கேள்விக்கு நேற்றைய நேர்காணலில் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், “50-50 எல்லாம் கிடையாது, தளபதி 67 100% என்னுடைய படமாகத்தான் இருக்கப் போகிறது” என கூறினார்.