கெளதம் மேனன்


தமிழ் படங்களில் இயக்குநர் மணிரத்னத்துக்கு அடுத்தபடியாக காதல் படங்களில் புதுமையைக் கொண்டு காட்டியவர் இயக்குநர் கெளதம் மேனன். விவகாரத்து பெற்ற இருவர் மீண்டும் காதலில் விழுவது, ஈகோவினால், பொறுப்புகளால் காதலில் ஏற்படும் பிரச்னைகள், என காதலைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை தனது படங்களில் அழகாகக் காட்டியிருக்கிறார். ரொமான்ஸ் தவிர்த்து கெளதம் மேனன் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தனித்துவமானவை.


தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வந்த கெளதம் மேனன் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தன் படங்களை இயக்கி வருகிறார். தயாரிப்பாளராக தனக்கு ஏற்பட்ட நஷ்டங்கள். தனது படங்களை வெளியிடுவதில் இருக்கும் சவால்கள், ஒப்பந்தத்தின் பெயரில் தயாரிப்பாளர்களுக்கு திரைப்படங்களை இயக்கித் தருவது, என ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சுதந்திரம் அவரிடம் தொடர்ச்சியாக பறிபோவதை நாம் பார்த்து தான் வருகிறோம்.


ரிலீஸுக்கு காத்திருக்கும் துருவ நட்சத்திரம்


இந்த சவால்களை கடந்து  மறுபடியும் ஓடிடி சிரீஸ், திரைப்படங்களில் நடிப்பது என பல முயற்சிகளை எடுத்து வருகிறார். சினிமாவில் நடித்த பணத்தை வைத்து தான் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தை எடுத்து முடித்தார். ஆனால் இன்று வரை அந்தப் படம் ரிலீஸ் தேதிக்காக நீதிமன்றத்தின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கிறது.


மம்மூட்டியை இயக்கும் கெளதம் மேனன்






இப்படியான நிலையில் மலையாளத்தில் நடிகர் மம்மூட்டியை கெளதம் மேனன் இயக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த கெளதம் மேனன் மலையாளத்தில் தன்னுடைய முழு சுதந்திரத்தில் மம்மூட்டியின் இந்த படத்தை இயக்குவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். புதுவிதமான கதைகளையும் புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் மம்மூட்டி இப்படத்தில் நடிப்பதுடன் தயாரிக்கவும் இருக்கிறார். இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 


டர்போ


வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள படம் டர்போ. ஆக்‌ஷன் மற்றும் காமெடி ஆகிய இரு ஜானரும் சேர்த்து எடுக்கப் பட்டிருக்கும் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநர ராஜ் பி ஷெட்டி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. வரும் மே 23 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில்  வெளியாக இருக்கிறது