கெளதம் மேனன்

மின்னலே படத்தின் மூலம் தமிழிழ் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் மேனன். தமிழ் படங்களில் பாரதிராஜா , செல்வராகவன்  மணிரத்னத்துக்கு அடுத்தபடியாக காதல் படங்களில் புதுமையைக் காட்டியவர் கெளதம் மேனன். விவாகரத்து பெற்ற இருவர் மீண்டும் காதல் வயப்படுவது,  ஈகோவினால், பொறுப்புகளால் காதலில் ஏற்படும் பிரச்னைகள், என காதலைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை தனது படங்களில் அழகாகக் காட்டியிருக்கிறார். ரொமான்ஸ் தவிர்த்து கெளதம் மேனன் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளும், பாடல் காட்சிகளும் தனித்துவமானவை.

கெளதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் ரிலீஸ் வரை வந்து பின் ரிலீஸூக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வோடு மலையாள திரையுலகம் பக்கம் திரும்பினார் கெளதம் மேனன். தற்போது நடிகர் மம்மூட்டி நடிப்பில் Dominic and the ladies purse  படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படத்திற்கான நேர்காணல் ஒன்றில் கெளதம் மேனன் கலந்துகொண்டார். அப்போது சிறந்த உதவி மனப்பாண்மைக் கொண்ட ஒருவருக்கு விருது கொடுப்பது என்றால் யாருக்கு கொடுப்பீர்கள் என மதன் கெளரி கேட்க அதற்கு கெளதம் மேனன்  இப்படி கூறினார்

 

எனக்காக யாரும் வரல

" நான் அப்படி யாரையும் பார்த்ததில்லை. நான் பரபரப்புக்காக இதை சொல்லவில்லை. ஆனால் துருவ நட்சத்திரம் படம் வெளியாகாத போது யாருமே எனக்கு ஃபோன் செய்து பேசவில்லை. என்ன நடக்கிறது என்பதைகூட யாரும் தெரிந்துகொள்ளவில்லை. தெரிந்துகொள்ள யாரும் ஆசைப்படவும் இல்லை. அதுமட்டுமில்லாமல் ஒருவர் வெற்றியைப் பார்த்து சந்தோஷப்படும் துறை இது இல்லை. ஒரு படம் நல்லா போனால் ஓ அப்படியா என்றுதான் நினைப்பார்கள் சந்தோஷப்பட மாட்டார்கள். இதை எல்லாம் சொன்னால் நாம் விரக்தியான நபர்களாக தெரிவோம் ஆனால் இதுதான் உண்மை. யாருக்குமே கவலை இல்லை. தயாரிப்பாளர் தானு மட்டும்தான் எனக்கு ஃபோன் செய்து என்னாச்சு நான் ஏதாவது செய்யனுமா என்று கேட்டார். அதை தவிர்த்து லிங்குசாமி என்னுடைய நண்பர் அவருடன் முயற்சி செய்தார். இது ஒன்றும் ராக்கெட் சைன்ஸ் கிடையாது. மற்ற படங்களுக்கு வரும் அதே பிரச்சனைதான் என் படத்திற்கும் வந்திருக்கிறது. இந்த படத்தை நான் தயாரித்தேன் என்று சொல்கிறார்கள். இந்த படத்தை நான் தயாரிக்கவில்லை நான் இதை எடுத்து வெளியிடுகிறேன். இந்த இருவரைத் தவிர அந்த படம் வெளியாகதது பற்றி யாருமே ஒரு வார்த்தை கூட கேடகவில்லை.