தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். நடிகராக மட்டுமின்றி துப்பாக்கிச் சுடும் வீரர், ட்ரோன் வடிவமைப்பாளர், புகைப்பட கலைஞர் என பன்முகம் கொண்டவர். இத்தனை முகங்கள் அஜித்திற்கு இருந்தாலும் அடிப்படையில் அவர் கார் மற்றும் பைக் பந்தய வீரர். 


இந்த சூழலில், அவர் துபாயில் நடக்கும் எஸ்24 கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் தனது அணியை களமிறக்கினார். இந்த பந்தயம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 


போர்ஷே 992 கார் பிரிவில் அஜித்தின் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. 3வது இடம்பிடித்த மகிழ்ச்சியில் அஜித்குமார் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். சிறு குழந்தை போல தனது அணி வீரர்களுடன் இணைந்து வெளியில் மகிழ்ச்சியுடன் ஓடி வந்தார். மேலும், இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்தி கார் பந்தய மைதானத்தில் உலா வந்தார். 






அஜித்தின் அணி 3வது இடம் பிடித்ததற்கு அவரது ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது மிகப்பெரிய சாதனையாகும். முதலிடத்தில் ரெட் கேமல் - ஜோர்டன்ஸ் அணியும், இரண்டாவது இடத்தில் தியாரா அவுட்டோர் ரேஸிங் அணியும், 3வது இடத்தில் அஜித்குமார் ரேஸிங் அணியும் வெற்றி பெற்றுள்ளனர்.  அஜித் அணியினர் மொத்தம் 567 லேப்ஸ் ஓட்டியுள்ளனர். 






வெற்றி பெற்ற அஜித்திற்கு அங்கு குவிந்திருந்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அஜித் கார் பந்தயத்தில் பங்கேற்று இருப்பதால் தினமும் அவரை காண அங்கு ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் அஜித்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். 


அஜித் மகிழ்ச்சியில் வெளியில் ஆர்ப்பரித்துக் கொண்டு ஓடி வரும் வீடியோவும், அவர் தேசிய கொடியுடன் உலா வரும் வீடியோவும், அவர் தனது அணியினருடன் உற்சாகமாக துள்ளிக்குதித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.