தமிழ் சினிமாவில் பெருமளவில் பாராட்டுக்களை குவித்த, மிகச்சிறந்த  படங்களை இயக்கி, தனக்கென தனிப்பெயர் பெற்றவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தயாரிப்பு, நடிப்பு ஆகிய துறைகளிலும் களம் இறங்கி கலக்கி வருகிறார். விரைவில் வெளிவரவிருக்கும் நெட்பிளிக்ஸ் ஆந்தாலஜி திரைப்படமான “நவரசா” திரைப்படத்தில் "கிடார் கம்பியின் மேலே நின்று" பகுதியை இயக்கியுள்ளார். இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் ‘காதல்’ உணர்வினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், கமல் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், நேத்ரா கதாபாத்திரத்தில் நடிகை ப்ரயகா ரோஸ் மார்டினும் நடித்துள்ளனர்.


சூர்யா நடித்த கதாபாத்திரம் குறித்து  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், '' இந்த கதாபாத்திரத்திற்கு  நடிகர் சூர்யா தான்  எனது முதல் தேர்வாக இருந்தார். இப்பாத்திரத்தில் வேறு யாரும் நடிப்பதை நான் கற்பனை கூட செய்யவில்லை. அவருடன் இணைந்து பணியாற்ற  மிக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். இந்தப்படம் அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. திரையிலும் அது மிக அழகாக வெளிப்பட்டுள்ளது என்றார்.




படத்தில் ப்ரயகா ரோஸ் மார்டின் கதாபாத்திரம் பற்றி அவர் கூறியதாவது, ''கமலின் வாழ்க்கையில் நேத்ரா புத்தம் புதிய சுவாச காற்றாக, வசந்தம் போல வருகிறாள். அவளின் குணம்  நம் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலானது.  ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் இந்த கதாபாத்திரத்தை மிக அற்புதமான முறையில் நடித்துள்ளார்.   அவர்  பேசும் விதம், தோற்றமளிக்கும் விதம், தலைமுடியுடன் விளையாடும் விதம், இந்த குணங்கள் வெறும்  உடல் ரீதியானவை அல்ல. இதெல்லாம் கதாப்பத்திரத்தின் மனதோடு இணைந்தவை.  அவர் இசையைப் பற்றி பேசிய  விதமும்  கதாபாத்திரத்துடன்  இணைந்து  கொண்ட  விதமும்  மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது.  திரையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை காண ஆவலுடன் உள்ளேன்'' என்றார்.




தமிழ் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் "நவரசா" ஆந்தாலஜி திரைப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள, இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை,  Madras Talkies மற்றும் Qube Cinema Technologies இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப்படத்தை வெளியிடும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமானது உலகில் முன்னனி இணைய ஸ்ட்ரீமிங்க் தளமாகும். 208 மில்லியன் சந்தாதாரர்களுடன் உலகின் 190 நாடுகளில், பல்வேறு மொழிகளில், பலவிதமான வகைகளில் திரைப்படங்கள் இணைய தொடர்கள், டாக்குமென்ட்ரிகள்  ஆகியவற்றை வழங்கி வருகிறது.