இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு, அதிதிபாலன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருமேகங்கள் கலைகின்றன'. வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் துரை வீராசக்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆடல் பாடலுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். 


 



கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் :


இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் பேசுகையில் "தங்கர்பச்சான் கேட்டு கொண்டதால் என்னால் நோ என்று சொல்ல முடியாது. இப்படத்தின் ரியல் ஹீரோ பாரதிராஜா சார் தான். நடிப்பதை காட்டிலும் படத்தை இயக்குவது சுலபம். வழக்கமாக நடிப்பதை காட்டிலும் இப்படத்தில் கொஞ்சம் புதுவிதமாக நடித்துள்ளேன். சொல்லப்போனால் உண்மையிலே அழுது நடித்திருக்கிறேன். யோகி பாபுவுடன் நடிக்க தான் சந்தர்ப்பம் அமையாதது சற்று வருத்தமாக இருந்தது. இருப்பினும் அடுத்த படத்தில்  அவருடன் இணைந்து நடிப்பது குறித்து பேசியுள்ளேன். 


தேடுதல் நிறைந்த படம் :


கருமேகங்கள் கலைகின்றன படத்தை பொறுத்தவரையில் ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருக்கும். பாரதிராஜா சாருக்கு ஒரு தேடல் இருக்கும். நான் ஒரு புறம் ஒன்றை தேடி கொண்டு இருக்கு அதிதி பாலன் ஒரு விஷயத்தை தேடிக்கொண்டு இருப்பார். பாரதிராஜா சார் மகனாக நடித்துள்ளேன். அவர் ஒரு காட்சியில் என்னை அடிக்க வேண்டும். முதலில் அடிக்க அவர் தயங்கினாலும் பின்பு அடித்துவிட்டார். என்றோ அவரிடம் அடி வாங்க வேண்டியது இப்போது வாங்கியதாக நினைத்து கொண்டேன். 


தங்கர்பச்சனும் நானும்:


தங்கர்பச்சனும் நானும் நிறைய பேசுவோம். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் அதனால் தான் இப்படத்தில் நடிக்க ஒத்து கொண்டேன். என்னுள் நிறைந்தவன் என தங்கர்பச்சன் என்னை குறிப்பிடுவர். அதே போல தான் அவரும் என்னுள் நிறைந்துள்ளார். இதற்கான அர்த்தம் எனக்கு மட்டுமே தெரியும்.  ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு சிறப்பாக இசையமைத்து இருப்பார் என நான் நம்புகிறேன். இதுவரையில் நான் அதை கேட்கவில்லை. ஜி. வி. பிரகாஷுக்கு எனது வாழ்த்துக்கள்" என பேசியிருந்தார். 


ஸ்டைலிஷ் வில்லன் :


திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பிடத்தக்க இயக்குநராக பிரபலமானவர் இயக்குனர் கௌதம் மேனன். இயக்குனர் மட்டுமின்றி ஒரு சிறந்த நடிகராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். சமீபகாலமாக முழுநேர நடிகராகவும் மாறிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு  சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கியிருந்தார். அதை தொடர்ந்து மீண்டும் அவர் இயக்கத்திலும் கவனம் செலுத்த உள்ளார் என கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் ஏராளமான வில்லன்கள் இருந்தாலும் ஒரு ஸ்டைலிஷ் வில்லன் என்ற கேட்டகரியில் சிறப்பாக நடித்து வருகிறார் கௌதம் மேனன். கருமேகங்கள் கலைகின்றன படத்தில் அவரின் கதாபாத்திரம் சற்று வேறுபட்டு இருக்கும் என்பதால் அப்படத்தின் ரிலீசுக்காக மிகவும் ஆர்வத்தில் உள்ளனர் அவரின் ரசிகர்கள்.