வாரணம் ஆயிரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாரணம் ஆயிரம் . சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். வாரணம் ஆயிரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துள்ளன.
தன்னுடைய தந்தையின் இறப்பைத் தொடர்ந்து தன்னுடைய கடந்த காலத்தை ஒரு மனிதன் நினைவுகூறுவதே வாரணம் ஆயிரம் படத்தின் கதை. நம் வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களை இழப்பது. ஒரு கட்டத்திற்கு மேல் நாம் அதை கடந்து வந்து மீண்டும் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்குவதை, சூர்யாவின் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களாக காட்டியிருப்பார் இயக்குநர் கெளதம் மேனன்.
சூர்யாவின் கரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்தப் படம் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தந்தை மகன் என இரு கதாபாத்திரங்களில் சூர்யாவின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இரண்டு கதாபாத்திரங்களும் ஒரே நடிகரால் நடிக்கப்பட்டது என்கிற உணர்வு சுத்தமாக ஏற்படாததே இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றி.
கூடுதலாக இந்தப் படத்தில் சூர்யாவின் ஃபிட்னஸைப் பார்த்து ரசிகர்களும் ஜிம்களுக்கு செல்லும் அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இடைவேளை வரை மட்டுமே வரும் சமீரா ரெட்டி ரசிகர்களின் கனவுக் கன்னியாகிப் போனார். இப்படியாக ஒவ்வொருவரும் தனக்கேற்ற வகையில் இந்தப் படத்தை கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
தமிழைத் தொடர்ந்து தெலுங்கி சூர்யா சன் ஆஃப் கிருஷ்ணன் என்கிற டைட்டிலில் வெளியாகி வாரணம் ஆயிரம் தமிழ் அளவிற்கு தெலுங்கு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. சமீபத்தில் தெலுங்குவில் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸாகி பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாகியது.
சுவாரஸ்யத் தகவல்கள்
வாரணம் ஆயிரம் படத்தின் ஒரு சில காட்சிகள் ஆஃப்கானிஸ்தானில் படம் பிடிக்கப்பட்டன. ஆப்கானிஸ்தானில் படம் பிடிக்கப்பட்ட முதல் தமிழ் படம் வாரணம் ஆயிரம். கெளதம் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான காக்க காக்க படத்தைத் தொடர்ந்து சென்னையில் ஒரு மழைக்காலம் என்கிற படத்தை தொடங்க இருந்தனர்.
இந்தப் படத்தில் அசின், த்ரிஷா என கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், சில காரணங்களால் இந்தப் படம் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து வாரணம் ஆயிரம் படம் உருவாகியது. முதலில் இந்தப் படத்திற்கு ‘நான் தான்’ அல்லது ‘உடல் பொருள் ஆவி’ என்று டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்டது.
ஒரு ஃப்ளைட்டில் இருக்கும்போது தன்னுடைய தந்தை இறந்த செய்தி கெளதம் மேனனுக்கு வந்ததை மையமாக வைத்து இந்தப் படத்தை எழுதத் தொடங்கி இருக்கிறார் கெளதம் மேனன்.
மேக்னாவாக நடித்து ரசிகர்களை அழவைத்த சமீரா ரெட்டியின் கதாபாத்திரத்தில் முதலில் தீபிகா படுகோனை நடிக்கவைக்கத் திட்டமிட்டிருந்தார் கெளதம் மேனன், தீபிகா பாலிவுட் படங்களில் பிஸியாக இருந்த காரணத்தினால் இந்த ஆசை நிறைவேறாமல் போனது. அதே போல் சிம்ரனின் கதாபாத்திரத்தில் நடிகை தபூவை நடிக்க வைப்பதே இயக்குநரின் ஆசை. தபூ நடிக்க மறுத்துவிட்டார்.
ஹாரிஸ் ஜெயராஜ்
வாரணம் ஆயிரம் படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். மொத்தம் எழு பாடல்களைக் கொண்ட சூப்பர்ஹிட் ஆல்பம் ஒன்றை இந்தப் படத்திற்கு வழங்கி இருக்கிறார். இளமை, காதல் , பிரிவு, என எல்லாவிதமான உணர்வுகளுக்கும் ஏற்ற பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்தன.