தீபாவளி கொண்டாட்டங்கள், புதுப்பட ரிலீஸ் , புது புது அறிவுப்புகள் என ட்விட்டர் பக்கமே அதகளப்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்த நிலையில் நடிகரும் இயக்குநருமான கௌதம் வாசுதேவ் மேனன் பதிவிட்ட ட்விட்டர் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. 


இன்று காலை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு , இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் , செவன் டி ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ,  வினோத் இயக்கத்தில் அன்புச்செல்வன் என்னும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை பா.ரஞ்சித், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டனர். அன்புச்செல்வன் என்பது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் சூரியாவில் கதாபாத்திரம். இந்நிலையில் புதிதாக கதாநாயகன் அவதாரம் எடுத்துவிட்டாரா கௌதம் மேனன் என பார்த்தால் , அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை வெளியிட்டிருந்தார் அதில் “இது எனக்கே அதிர்சியான செய்தியாத்தான் இருக்கு..நான் நடிப்பதாக கூறப்படும் இந்த படம் குறித்து எனக்கே தெரியாது...இதில் இயக்குநர் என குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை நான் சந்தித்தது கூட கிடையாது.இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய பெயர் இருக்கிறது..அப்படி இருக்கும் சூழலல் எப்படி இந்த மாதிரி எல்லாம் சுலபமாக செய்கிறார்கள் என நினைக்கும் போது பயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு பிறகு அன்புச்செல்வன் போஸ்டரை வெளியிட்ட பிரபலங்கள் பலரும் அதனை டெலிட் செய்து வருகின்றனர்.






இந்த நிலையில் Glimpse வீடியோவை வெளியிட்டது அன்புச்செல்வன் குழு. இதையடுத்து தற்போது செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம் வாசுதேவ் மேனன் “கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெய் என்னும் இயக்குநர் புதிய கதையுடன் என்னை சந்தித்தார். அந்த கதை எனக்கு மிகவும் பிடித்துபோனது நானும் நடிப்பதாக கூறிவிட்டேன்.  அது ஒரு புலன் விசாரணை திரைப்படம். சரி நான் தயாரிப்பாளரை ஒப்பந்தம் செய்துகொண்டு வருகிறேன் என்றார் இயக்குநர்.  மூன்று மாதங்கள் கழித்து தயாரிப்பாளருடன் வந்தார் ஜெய், நாங்கள் இணைந்து 4 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு தயாரிப்பாளர் போதிய பணம் கொடுக்காததால் படம் நின்று போனது. அதன் பிறகு ஜெய் வேறு தயாரிப்பாளர் தேடுகிறேன்” என என்னிடம் கூறினார். 








அதன் பிறகு 2021 இல் மீண்டும் அதே பழைய தயாரிப்பாளர் எனக்கு அழைப்பு விடுத்து, சில நிதி பிரச்சனையால் படம் நின்றுவிட்டது..மீண்டும் படத்தை தொடங்கலாம் என்றார். மேலும் இயக்குநரை மாற்றிவிட்டோம் என அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதற்கு நான் ஜெய் தனது தீவிர முயற்சியால், பல உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு இந்த கதையை உருவாக்கியுள்ளார். எனக்கு அவரில்லாமல் நடிக்க உடன்பாடில்லை என மறுத்துவிட்டேன்.


ஆனால் அவர்கள் என் மீது தயாரிப்பு தரப்பில் புகார் அளித்து நடிக்க வேண்டும் என்றனர். ஜெய் இதற்கு சரி என்றால் நான் நடிக்கிறேன் என கூறினேன், உடனே ஜெய் மீது வீண் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவரை சிறையில் அடைத்தனர். பிறகு எனக்கு தெரிந்தவர்களை வைத்து ஜெய்யை ஜாமினில் வெளியே கொண்டு வந்து தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர் சங்கத்தில் புகார் அளித்தேன். மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போதுன் என்னுடைய போஸ்டரை எனக்கே தெரியாமல் வெளியிட்டுள்ளனர். மேலும் பிரபலங்களிடம் நான் ஒப்புதல் கொடுத்த போஸ்டர் என பொய்யும் சொல்லியிருக்கிறார்கள் . ஜெய் இயக்கத்தில் நாங்க உருவாக்க இருந்த படம் பெயர் ‘வினா’ , அன்புச்செல்வன் குறித்து எனக்கு எதுவே தெரியாது என இதன் பின்னணியை விவரித்துள்ளார்.







அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் “எப்போதுமே ஒரே அன்புச்செல்வன்தான் என சூர்யாவை டேக் செய்துள்ளார். இது குறித்து தயாரிப்பு தரப்பு என்ன விளக்கம் கொடுக்கிறது என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.