கவுதம் கார்த்திக் - மஞ்சிமா திருமணம் வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தங்கள் காதல் கதை குறித்த சுவாரஸ்யத் தகவல்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.


இன்று சென்னை, வடபழனியில் கவுதம் கார்த்திக்கும் மஞ்சிமாவும் திருமணத்துக்கு முன் ஜோடியாக செய்தியாளர்களை சந்தித்தனர்.


அப்போது பேசிய கவுதம் கார்த்திக், தேவராட்டம் படத்தில் பணிபுரியும்போது நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்கள் உறவு அடுத்த தளத்துக்குச் சென்றது. மஞ்சிமா அழகானவர் என்பதோடு, நான் சோர்வாக உணரும்போதெல்லாம் என்னை மீட்டெடுக்கிறார்.


நான் தான் காதலை முதலில் சொன்னேன். மஞ்சிமா இரண்டு நாள்கள் அவகாசம் எடுத்து ஓகே சொன்னார். எங்கள் இரண்டு குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.


 






சரியான நபரை நீங்கள் வாழ்வில் சந்தித்தால் அவர் உங்களை முழுமையடையச் செய்வார் என என் அப்பா கூறுவார். அப்படி நான் வாழ்வில் சந்தித்த நபர் தான் மஞ்சிமா” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய மஞ்சிமா கவுதம் கார்த்திக் நடித்த படங்களில் தனக்கு ரங்கூன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இந்த இரண்டு படங்களும் பிடிக்கும் எனத் தெரிவித்தார்.


மணிரத்னத்தின் 'கடல்’ படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக். இவரும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான 'அச்சம் என்பது மடமையடா' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை மஞ்சிமா மோகனும் ’தேவராட்டம்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்தனர்.


2019ஆம் ஆண்டு  முத்தையா இயக்கத்தில் வெளியான 'தேவராட்டம்' படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் இருந்தே இருவரும் காதலித்து வந்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.


இருவரும் வெளிப்படையாகவே பல நிகழ்ச்சிகள், பொது இடங்களில் இணைந்து வலம் வந்த நிலையில், வெளிப்படையாக தங்களின் காதலை மட்டும் தெரிவிக்காமல் தயக்கம் காண்பித்து வந்தனர்.


இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 31ம் தேதி தான் இருவரும் தங்களின் காதலை வெளிப்படையாக வெளியுலகுக்கு அறிவித்ததோடு, தங்கள் திருமண செய்தியையும் அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர். வாழ்த்துகள் கவுதம், மஞ்சிமா!