சின்னக் கலைவாணர் என அழைக்கப்படும் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த ஏப்ரல் மாதம் 17 ம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மரணம் திரையுலகம் மற்றும் இரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 27 ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ‘எங்க சிரி பார்ப்போம்’ என்ற நிகழ்ச்சி வெளியானது. இந்த நிகழ்ச்சி நடிகர் விவேக் பங்கேற்ற இறுதி நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சியை நடிகர்கள் விவேக், சிவா ஆகியோர் தொகுத்து வழங்க, சதீஷ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.




திரைத்துறையினர் பலரும் விவேக் உடனான நினைவுகளை பகிர்ந்து வரும் நிலையில், திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகர் விவேக் உடனான கடைசி உரையாடல் குறித்த நினைவுகளை பகிர்ந்துள்ளார். எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சியை பார்த்த இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில், “நடிகர் விவேக் இறப்பதற்கு முன் அவரை வைத்து படம் இயக்குவதற்கு திட்டமிட்டு இருந்தேன். ஆனால் அவர் எங்க சிரி பார்ப்போம் என்ற ஒடிடி நிகழ்ச்சி வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார். அது தான் எங்கள் கடைசி உரையாடல். இன்று ஒடிடியில் அந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது அவர் கூறியது எனக்கு நினைவுக்கு வருகிறது” என அவர் தெரிவித்து இருந்தார்.



நடிகர் விவேக்கின் மரணத்தில் கொரோனா தடுப்பூசி சர்ச்சை எழுந்தது. இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்புதான் விவேக் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தார். இது குறித்து பல்வேறு தரப்பினரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்த நிலையில், விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டதற்கும், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலர் அப்போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விவேக் இறப்பு தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.  விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் அனுப்பிய அந்த புகாரில், ‛நல்ல உடல்நலத்துடன் இருந்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பு ஊசி போடப்பட்ட பிறகு இறந்திருக்கிறார் என்றும்,  அதுகுறித்து  மத்திய அரசு விசாரணை நடத்த மத்திய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்றும், தனது தெரிவித்திருந்தார். இந்நிலையில், நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் ஏற்றுக் கொண்டது.