காஃபி வித் கரண் நிகச்சியின் இந்த வார எபிசோடில் கலந்துகொண்ட ஷாருக்கான் மனைவி கௌரி கான், தன் மகன் ஆர்யன் கான் கைது குறித்து பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானும், இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரும் நீண்ட கால நண்பர்களாக பாலிவுட்டில் வலம் வருகின்றனர்.


நட்பைத் தாண்டி குடும்ப நண்பர்களாக இருவரும் வலுவான நட்பைப் பேணி வரும் நிலையில், ஷாருக்கின் மனைவியும், பிரபல இண்டீரியர் டிசைனராகவும் உள்ள கௌரி கானின் நெருங்கிய நண்பராகவும் கரண் வலம் வருகிறார்.


இச்சூழலில், காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் இரண்டாம் முறையாக கௌரி கான் இந்த வாரம் பங்கு பெற்றார். இந்த நிகழ்ச்சியில் ஆர்யன் கான் கைது குறித்து கௌரியிடம் மறைமுகமான கரண் கேள்வி எழுப்பினார்.


 






"இது அவருக்கு மிகவும் கடினமான காலம். இதிலிருந்து நீங்கள் அனைவரும் வலுவாக மீண்டெழுந்துள்ளீர்கள். நான் உன்னை ஒரு தாயாக அறிவேன். நாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், நானும் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


இது எளிதானது அல்ல.  நீ முன்னெப்போதையும் விட வலுவாக மீண்டு எழுந்துள்ளாய் கௌரி” என கரண் பேசினார்.


இதற்கு பதிலளித்த கௌரி, “நாம் அனுபவித்ததை விட மோசமாக எதுவும் இருக்க முடியாது. ஆனால் நாம் அனைவரும் ஒரே குடும்பமாக நிற்கும்கும்போது வலுவாக இருக்கிறோம். நாம் நேசிக்கப்படுவதாக உணர்கிறோம்.


 






எங்கள் நண்பர்கள் அனைவரும் எங்களுக்குத் தெரியாத பலரும் பல மெசேஜ்கள் அனுப்பினார்கள், அன்பு காட்டினார்கள். நாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என கௌரி கான் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் பயணக் கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தால் (என்சிபி) ஆர்யன் கைது செய்யப்பட்டார்.


25 நாள்கள் சிறையில் இருந்த ஆர்யன் கான் ஜாமீனில் வெளியே வந்ததை அடுத்து முன்னதாக அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.