கருடன் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதிர்பார்க்கவில்லை என நடிகர் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். 


துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரகனி, ஷிவதா, ரோஷினி பிரியதர்ஷன் என பலரும் நடித்த படம் “கருடன்”. யுவன் இசையமைத்த இந்த படம் கடந்த மே 31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ரோஷினி பிரியதர்ஷனின் சகோதரர் கேரக்டரில் துஷ்யந்த் நடித்திருக்கிறார். இவர் ஈசன் படத்தில் நடிகை அபிநயாவின் நடித்து அதிக கவனம் பெற்றார். துஷ்யந்த் நடிகர் ஜெயபிரகாஷின் மகனாவார். 



நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள துஷ்யந்த், “கருடன் படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை எதிர்பார்க்கவில்லை. என்னிடம் படத்தில் சின்ன கேரக்டர் இருக்கு செய்றீங்களா என துரை செந்தில் குமார் தரப்பில் இருந்து கேட்டார்கள். சூரி, சசிகுமார் என இருவரும் இருக்கிறார்கள் என சொன்னதும், முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டர் என்றதும் ஓகே சொல்லிவிட்டேன். நான் நகரத்தில் வளர்ந்தவன் என்பதால் அந்த கிராமத்து வட்டார வழக்கு வரவில்லை. கஷ்டப்பட்டு தான் நடித்தேன். 






ஈசன் படத்தின் சமுத்திரகனியுடன் நடித்திருந்தேன். கருடன் படத்தில் நடித்தாலும் அவருக்கும் எனக்குமான காட்சிகள் என்பது இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை பார்த்ததும், என்னடா இப்படி வளர்ந்துட்ட என ஆச்சரியப்பட்டு போனார். 14 வருஷம் ஆகிட்டு சார் என நானும் சொன்னேன். வித்தியாசமாக இருக்க, இன்னும் நிறைய பண்ண வேண்டும் என பாராட்டினார். ஈசன் சமயத்தில் பார்த்த அன்பு இன்னும் சமுத்திரகனியிடம் இருக்கிறது.



ஈசன் படத்துக்கு சசிகுமார் தான் இயக்குநர். கருடன் படத்தில் நடிகர். போலீஸ் ஸ்டேஷனில் ஒரு காட்சி இருக்கும். எனக்கு வட்டார வழக்கு வராததால் பயமாக இருந்தது. சசிகுமார் இதை கவனித்து தனியாக அழைத்து என்னவென்று கேட்டு அதனை போக்கினார். நான் கருடன் பார்த்து விட்டு சூரியின் நடிப்பை பார்த்து ஆஃப் ஆகிட்டேன். இவ்வளவு நாள் இந்த மனுஷன் காமெடி பண்ணிட்டு இருந்தாரே என யோசித்தேன். நாடோடிகள் படத்தின் ஷூட்டிங்கில் தான் சசிகுமார் என்னை முதலில் பார்த்தார். அப்பா ஜெயக்குமாரை அழைத்து வர சொன்ன பிறகு தான் ஈசன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்” என தெரிவித்துள்ளார்.