சூரி


விடுதலை படத்திற்கு பின் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள படம் கருடன். துரைசெந்தில்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சசிகுமார் , உன்னி முகுந்தன் , உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் மே 31 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் நடிகர் சூரி நாயகனாக தனது புது அவதாரத்தைப் பற்றியும் கருடன் படத்தைப் பற்றியும் நிறைய தகவல்களை ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பகிர்ந்து வருகிறார். 


எனக்கு ஆக்‌ஷன் பிடித்திருக்கிறது


ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் கருடன் படத்தில் நடித்தது குறித்து சூரி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது. " நான் முதல் முறையாக ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் படம் கருடன். விடுதலை படத்தில் சேசிங் காட்சிகள் இருந்தன. ஒரு வீட்டின் கூரையில் இருந்து இன்னொரு வீட்டின் கூரைக்கு தாவுவது போன்ற சவாலான காட்சிகள் அப்படத்தில் இருந்தாலும் கருடன் படத்தில்தான் நான் முதல் முறையாக நிஜமான சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். எப்படி விடுதலை படத்தைப் பார்த்து காமெடி சூரியை எல்லாரும் மறந்தார்களோ கருடன் படத்தில் இருக்கும் சூரி விடுதலை படத்தை மறக்க வைத்து ஒரு புது சூரியை மக்கள் பார்ப்பார்கள் என்று நம்புகிறேன்.  முடிந்த அளவிற்கு அதிக கட் இல்லாமல் சண்டைக்காட்சிகளை சிங்கிள் ஷாட்டில் எதார்த்தமாக எடுக்க முயற்சி செய்திருக்கிறோம். ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தது எனக்கு ரொம்பவும் புதிதான ஒரு அனுபவமாக இருந்தது. எனக்கு ஆக்‌ஷன் பிடித்திருக்கிறது." என்று அவர் கூறினார்.


நான் ஏன் காமெடியனாக நடிக்கனும்


காமெடியனாக இருந்து கதாநாயகனாக நடிக்கத் தொடங்கியிருக்கும் சூரி சினிமாவில் தனது அடுத்தக்கட்ட திட்டங்களைப் பற்றியும் பேசியுள்ளார். இனிமேல் தான் மீண்டும் காமெடியனாக நடிக்க மாட்டேன் என்று கூறி ஷாக் கொடுத்திருக்கிறார் சூரி. இது குறித்து அவர் தெரிவிக்கையில் "விடுதலை படம் நடித்த போது வெற்றிமாறன் என்னிடம் இந்த படம் முடிந்தது நீங்கள் மறுபடியும் வழக்கமான காமெடி கேரக்டர்களை எடுத்து நடியுங்கள். எல்லாரும் சொல்வதைக் கேட்டு நாயகனாக தான் நடிப்பேன் என்று இந்த பக்கம் வர வேண்டாம் என்றார். ஆனால் விடுதலை படம் ரிலீஸ் ஆகி அதற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து 'போற போக்க பார்த்தா நீங்க மறுபடியும் காமெடியனாக நடிக்க முடியாது போல இருக்கே" என்றார். எனக்கு இனிமேல் காமெடி கதாபாத்திரங்களில் நடிப்பதில் விருப்பமில்லை. எனக்கு ஏற்ற மாதிரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கலாம் என்று தான் நினைத்திருக்கிறேன். எங்கேயோ இருந்த என்னை இவ்வளவு தூரம் கூட்டி வந்து நிறுத்தியிருக்கிறார்கள். எனக்காக நல்ல கதைகளை எழுதி அதை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் முன்வரும்போது நான் ஏன் காமெடியனாக நடிக்க வேண்டும். மக்கள் என்னை ஏற்றுக்கொள்ளும் மாதிரியான கதைகளை தேர்வு செய்து அதில் நடிப்பேன். அதில் நான் முயற்சி செய்யாத ஒரு சில வித்தியாசமான கதைகளையும் தேர்வு செய்து நடிப்பேன். அது எப்படி ரசிகர்களிடம் வொர்க் அவுட் ஆகிறதோ அதைப் பொறுத்து நான் கதைகளை தேர்வு செய்யலாம் என்றிருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.