சின்னத்திரத்தில் உறுதியாக கால் பதித்த பலரும் வெள்ளித்திரையில் பெரிய நட்சத்திரங்களாக வலம் வருகிறார்கள். அப்படி வெள்ளித்திரையில் ஒரு காமெடியனாக நுழைந்து ஹீரோவான நடிகர்களில் ஒருவர் நடிகர் சந்தானம். இந்த நகைச்சுவை சரவெடிக்கு இன்று 43வது பிறந்தநாள் இன்று. ஹேப்பி பர்த்டே சந்தானம் !!!



நடிகர் சந்தானம் (Google)


 


ட்ரெண்ட் செட்டர் சந்தானம்:


தமிழ் சினிமாவில் ஏராளமான காமெடியன்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி வித்தியாசமான நகைச்சுவை மூலம் ட்ரெண்ட் செட்டிங் செய்தவர் சந்தானம். முன்னணி நடிகர்களாக இருக்கும் அனைவருடனும் இணைந்து காமெடி ட்ராக் செய்துள்ளார். நகைச்சுவை மூலம் வெகுஜன மக்களை எளிதாக சென்றடைய முடியும் என்ற லாஜிக்கை நன்கு உணர்ந்தவர். அப்படி நையாண்டி, நகைச்சுவை, கவுண்டர் இவை அனைத்தும் சினிமாவிற்கு மிகவும் தேவையான ஒரு அம்சம் என்பதை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டவர் நடிகர் சந்தானம். 






வசனங்கள் தான் பிளஸ் பாயிண்ட் :


என்.எஸ்.கிருஷ்ணன் தொடங்கி வடிவேலு வரையில் தமிழ் சினிமாவில்  வெவ்வேறு காலகட்டங்களில் காமெடியன்களாக திரையை அலங்கரித்தவர்கள் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாதவர்களாக உள்ளனர். அதற்கு காரணம் அதில் ஒவ்வொருவரும் ஒரு தனி ஸ்டைல் இருந்தது தான். அப்படிப்பட்ட போட்டி நிறைந்த ஒரு பாதையில் தனது பயணத்தை தொடங்கிய போதும் யாரையும் காப்பி அடிக்காமல் தனக்கென ஒரு யுக்தியை வெற்றிகரமாக அமைத்து கொண்டு இலகுவாக பயணித்தவர் நடிகர் சந்தானம். குறிப்பாக சின்னத்திரையில் திரைப்படங்களை கேலி செய்து உருவாக்கப்பட்ட நகைச்சுவை நிகழ்ச்சியாக “லொள்ளுசபா”வில் சந்தானம் தான் யார் என்பதை நிரூபித்தார். 


அவரின் அலட்டல் இல்லாத இயல்பான வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு போன்ற நகைச்சுவை நடிகர்கள் எல்லாம் எப்படி தமிழ் சினிமாவில் ஆட்சி செய்தார்கள் அதே போல இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நகைச்சுவையின் அடையாளமாக திகழ்ந்தவர் நடிகர் சந்தானம்.


ரஜினி டூ விமல் வரை


விஜய் நடித்த சச்சின், சிம்பு நடித்த மன்மதன் படத்தின் மூலம் வெள்ளித்திரைக்குள் நுழைந்த சந்தானம் ரஜினி, அஜித், தனுஷ், சூர்யா, கார்த்தி, ஜீவா,ஆர்யா, விமல், ஸ்ரீகாந்த், அதர்வா உள்ளிட்ட தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரம் தொடங்கி நாளைய நட்சத்திரங்கள் வரை அனைவரது படத்திலும் காமெடியனாக அசத்தினார். 






ஹீரோ சார் பயணம் :


இவர் காமெடியன் அதற்கு மட்டுமே இவர் சரிப்பட்டு வருவார் என இருந்த முத்திரையை தகர்த்து எறிய அவர் அடுத்ததாக கையில் எடுத்தது ஹீரோ கதாபாத்திரங்கள். ஹீரோவுக்கு நண்பன் என்ற ட்ராக்கில் இருந்து தானே ஹீரோவானார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்தார். அடுத்தடுத்து டகால்டி, தில்லுக்கு துட்டு, ஏ 1, சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு-2, பிஸ்கோத் என பல திரைப்படங்களில் ஹீரோவாக முன்னேற்ற பாதையில் முன்னேறி வருகிறார் நடிகர் சந்தானம்.


ஹீரோவானாலும் அவரின் நக்கல், நையாண்டி, கலாய், கவுண்டர் என எதுவுமே குறையவே இல்லை. இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் ஹீரோ சந்தானத்திற்கு ஏனோ எந்த ஒரு திரைப்படமும் பெரிய ஹிட் கொடுக்கவில்லை. அவரின் வசனத்தை போலவே 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' என்பதை போல் இன்றும் சந்தானம் லிஸ்டில் மூன்று நான்கு படங்கள் அடுத்தடுத்து உள்ளன. எப்படி தன்னை ஒரு சிறந்த காமெடியனாக செதுக்கி கொண்டாரோ அதே போல ஒரு சிறந்த ஹீரோவாகவும் அவரால் ஜெயிக்க முடியும் என்ற அவரின் தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள். 


ஒன்ஸ் மோர் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சந்தானம் !!!