விஜய் அவரது பெற்றோரை தள்ளிவைப்பது தனக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருப்பதாக பிரபல இயக்குநரும், பாடகருமான கங்கை அமரன் பேசியிருக்கிறார்.
முகமறியான் பட இசைவெளியீட்டு மேடையில் பேசிய கங்கை அமரன், “ விஜய் அவருடைய அம்மா அப்பாவை ஒதுக்கிவைப்பது போன்று பேசியது எனக்கு மிகுந்த வருத்ததை ஏற்படுத்தியது. நாங்களெல்லாம் சந்திரசேகரின் நாடகத்திற்கு வாசித்தவர்கள். விஜய் பிறந்தபோது அவர் அம்மா எங்களது குரூப்பில் பாடிக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்திலெல்லாம் விஜயை அவர் தூக்கிக்கொண்டு வருவார். நாங்கலெல்லாம் அவரை கொஞ்சுவோம். அவர்கள் விஜயை எப்படி வளர்த்தார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அப்படியிருக்கும் போது விஜய் இப்படி செய்வது எனக்கு எரிச்சலை உண்டாக்கியது. அன்றைக்கு மறுநாளே நான் பத்திரிகைகளில் சொன்னேன். அம்மா அப்பாவை விலக்கி வைத்து வாழ்வது சரியாக இருக்காது. நிம்மதியாக வாழமுடியாது. அதனால் பெற்றோரிடம் சேர்ந்து வாழச்சொல்லி விஜய் ரசிகர்கள் அவரிடம் தயவு செய்து சொல்லுங்கள். . இது விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள்.” என்று பேசினார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘பீஸ்ட்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாகியுள்ள இந்தப்படத்தின் பின்னணி வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் முன்னதாக தொடங்கிய நிலையில் அண்மையில் படத்திலிருந்து, ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்கல் வீடியோவாக, அரபிக்குத்து பாடல் வெளியிடப்பட்டது.
வெளியான 10 மணி நேரத்திலேயே 16 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய இந்தப்பாடல், ஒரே நாளில் அதிகபார்வையாளர்களை கடந்த லிரிக்கல் வீடியோ என்ற சாதனையையும் படைத்தது. உலக அளவில் பிரபலமான இந்தப்பாடலில் விஜய் ஆடுவது போலவே, ஆடி வீடியோக்களை ரெடி செய்து, தங்களது சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.