தமிழ் சினிமாவில் 80களின் மைய்யப்புள்ளியாக இருந்தது இளையராஜாவும் கங்கை அமரனும். இளையராஜாவின் இசை இல்லாமல் படம் இல்லை என்ற நிலை அன்றைக்கு. இளையராஜாவைப் பிடிக்க வேண்டுமானால் கங்கை அமரன் ஒரு பெரும் வழி. அதாவது கடலை அடைய நதி போல. பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர், நடிகர், பாடகர், இசையமைபாளர் என பல்வேறு முகங்களை திறமையின்  அடையாளமாகக் தன்னுள் கொண்டிருந்தவர் கங்கை அமரன். கடலை அடைய நதியை நாடினாலும் கடல் தான் நமக்கு ஜோதியாகத் தெரிவதுபோல், கங்கை அமரன் தனக்கான அங்கீகாரத்தினை முழுமையாகப் பெறவில்லை, மற்றும் தமிழ் சினிமாவும் ஆகச்சிறப்பாக அங்கீகரிக்கவில்லை என இயக்குநர் மற்றும் நடிகர் சந்தானபாரதி கூறியுள்ளார்.


கங்கை அமரன் பற்றி மேலும் அவர் கூறுகையில், மிகவும் இனிமையான நண்பர். 70-களில் இருந்தே பழக்கம், அதாவது அமர்சிங்காக இருந்த காலத்திலேயே பழக்கம். என்னை இயக்குனராக ஆக்குவதில் என்னைப்போல் மிகவும் முனைப்புடன் இருந்தவர் கங்கை அமரன். எனது இயக்கத்தில் முதல் படமான பன்னீர் புஷ்பங்களுக்கு தயாரிப்பாளர் கங்கை அமரன் தான்.   அதனாலேயே என்னவோ எனது படங்களில் பெரும்பாலான படங்களுக்கு அவர் தான் பாடலாசிரியர். டியூன் கேட்டுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து பாடல் தருபவராக அவர் இருந்ததில்லை. டியூன் கேட்ட உடனேயே பாடல்களை எழுதி தந்துவிடுவார். மேலும் டியூனுக்கு ஏதோ வார்த்தைகள் போட்டு நிரப்பினால் போதும் என்ற மனநிலையும் அவரிடம் இருக்காது, அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். மிகவும் போட்டி நிறைந்த அன்றைய காலத்தில் அவரது பாடல்கள் தனி கவனம் பெற்றது. ஒரு முறை செல்போனில் டியூன் கேட்டு பாடல் தந்தவர். ஒரு வருடப் பிறப்பில், கோவிலுக்கு போய்விட்டு  காரில் திரும்பி வரும்போது, ’புத்தம் புது காலை என்ற பாடலை எழுதினார்.  அதேபோல் சிறுபொண்மணி போன்ற காலத்திற்கும் நிலைக்கும் பாடல்கள் எழுதியவர். கரகாட்டக்காரன் மூலம் எனக்கு ஒரு நிலையான அங்கீகாரம் தந்தவர் அவர்தான்.


நான் 250 படங்கள் வேலை செய்திருந்தாலும் கரகாட்டக்கரனால்தான், மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தேன். அவரிடம் இருக்கும் பன்முகத்தன்மையால் தான் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது. பல பாடல்கள் நாம் இளையராஜா இசையமைத்ததாக நினைத்துக்கொண்டு இருப்போம், ஆனால் அவை கங்கை அமரனால் இசையமைக்கப்பட்டதாக இருக்கும். அவரை நாம் இன்னும் கௌரவப்படுத்தியிருக்க வேண்டும், என இயக்குனர் சந்தான பாரதி கூறியுள்ளார்.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண