ஏழைகளில் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும், வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், சேலம் அடிவாரத்தில் இருந்து மலைப்பாதை வழியே இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிக அதிகம். இந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் ஏற்காடு சென்று விட்டு மலைப் பாதையில் திரும்பி வந்தபோது, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த இளங்கோவன் (54), திருமணம் நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகிய அவரது மகள் புதுப்பெண் லோகேஸ்வரி (27) ஆகியோர் 5 வது கொண்டை ஊசி வளைவு தடுப்பு சுவரில் மோதி, 40 அடி பள்ளத்தில் அடுத்த சாலையில் வந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.



புல்லட் பைக்கில் வந்த இவர்கள் இருவரும் தலைக்கவசம் அணிய வில்லை. மேல் இருந்து கீழே விழுந்ததும், தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தனர். இச்சம்பவத்தின் எதிரொலியாக ஏற்காடு மலைப்பாதையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிக்கும் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். தலைக்கவசம் இன்றி வரும் நபர்களை மலைப்பாதையில் அனுமதிக்கக்கூடாது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் அதிரடி உத்தரவிட்டார். இதன்பேரில், ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் காவல்துறையினர் தீவிர தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.



ஏற்காட்டிற்கு நேற்று இருசக்கர வாகனத்தில் செல்ல மலைப் பாதைக்கு வந்த சுற்றுலா பயணிகளை நிறுத்தி, தலைக்கவசம் அணிந்து வந்தால் தான் மேலே அனுமதிப்போம் என காவல்துறையினர் திருப்பி அனுப்பினர். தலைக்கவசம் அணிந்து வந்த நபர்களை மேலே செல்ல அனுமதித்தனர். இந்தவகையில் ஏராளமானோர் தலைக்கவசம் இன்றி வந்து திரும்பிச் சென்றனர். சிலர் அஸ்தம்பட்டி பகுதிக்கு வந்து புதிய தலைக்கவசம் வாங்கி அணிந்து கொண்டு ஏற்காட்டிற்கு சென்றனர். இந்த உத்தரவை தீவிரமாக காவல்துறையினர் பின் பற்ற இருப்பதாகவும், தலைக்கவசம் இன்றி இனி யாரும் மலைப்பாதையில் பயணிக்க இயலாது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இது மட்டுமின்றி இரவு நேரங்களில் ஏற்காடு மலை போதையில் கடந்த சில நாட்களாக காட்டெருமைகள் போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் மிகவும் அதிகமாக உள்ளது. எனவே ஏற்காடு மலை பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் பொறுமையாக செல்லவும், முடிந்தவரை இரவு நேரங்களில் ஏற்காடு மலை பாதையில் செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இரவு நேரங்களில் மலை பாதையில் வரும் வன உயிரினங்களை புகைப்படம் எடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது.