'புளி மாங்கா புளிப் பாட்டு' பாடுனது நான்தான். ஆனா, பாட்டு ரீச் ஆனளவுக்கு நான் ரீச்சாகல. சொல்லப்போனா ஒரு பிரைவேட் சேனல் என் பாட்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க. ஒருமுறை கூட எனகான அங்கீகாரம் கொடுக்கல என வருத்தப்படுகிறார் கானா பாடகர் கானா முத்து. சமீபத்தில் வெளியான 'சார்பட்டா பரம்பரை' படத்தின் 'வம்புல தும்புல' பாடுனதும் இவர்தான். இவரிடம் பேசினோம், 



சின்ன வயசுல இருந்தே வியாசர்பாடி ஏரியாவுலதான் இருக்கோம். எங்களுடைய உழைப்பும், ரத்தமும் சிந்தி உருவான ஏரியா இது. இப்போ இந்த ஏரியா சென்னையில முக்கியமான பகுதி. எங்க ஏரியா பசங்க எல்லாரும் இங்கதான் இருக்கோம். எங்கள மாதிரியான வாசிகளை சென்னைக்கு அப்பால் கண்ணகி நகர்ல குடி அமர்த்தும் போது வருத்தமா இருக்கும். கஷ்டப்பட்டு உருவாக்குன ஏரியாவுல டெவலப் ஆனதுக்கு அப்புறம் இங்கே இருக்க நீங்க லாயக்கு இல்லனு சொல்லி துரத்துரது கஷ்டமான விஷயம். எங்களுடைய உண்மையான கஷ்டத்தை படமா எடுத்த இயக்குநர் ரஞ்சித் அண்ணா மட்டும்தான். எங்களுகான உழைப்பு, கம்பீரம் எல்லாத்தையும் 'சார்பட்டா' படத்துல காட்டுனார். வெற்றிமாறன் டைரக்டர் 'வடசென்னை' படத்துல காட்டியிருந்தாலும் கொஞ்சம் ரெளடிகள் மாதிரி காட்டியிருந்தார். ஆனா, ரஞ்சித் அண்ணா எங்களுடைய வலியை காட்டியிருந்தார். முக்கியமா, இங்கே எழுபது, என்பதுகள்ல பாக்ஸர்ஸ் நிறைய பேர் இருந்திருக்காங்க. 


இவங்களைப் பற்றி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். இப்போ ஏரியாவுல நிறைய பசங்க பாக்ஸிங் கத்துக்க ஆர்வமா இருக்காங்க. இதெல்லாம் ரஞ்சித் அண்ணாவாலதான். தவிர, ரஞ்சித் அண்ணா படத்துல பாடணும்ங்குறது ஆசை. இது நிறைவேற்றுனது சந்தோஷம். டென்மா அண்ணா சொன்னார். 'நீ ரஞ்சித் அண்ணா படத்துல பாட போறேன்னு' இவர் சொன்ன மாதிரியே 'பாரிஸ் ஜெயராஜ்' ஆடியோ லான்ச்ல சந்தோஷ் நாரயணன் என்னைப் பார்த்துட்டு 'படத்துல ஒரு பாட்டு பாடுறனு'னார். அப்போ என்னால நம்ப முடியல. இவர் சொல்லி மூணு மாசத்துல சந்தோஷ் அண்ணன் ஸ்டூடியோவுல பாட கூப்பிட்டார். முக்கியமா, கவிஞர் கபிலன் வரிகள்ல பாடுனது ரொம்ப பெருமையா இருந்தது. படம் ரிலீஸான உடனே நிறையப் பேர் போன் பண்ணி வாழ்த்துகள் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் நிறைய மெசேஜ் வந்திருக்கு. 



மேடைகள்ல பாடிக்கிட்டு இருந்த எங்களை டென்மா அண்ணா காஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ் இசைக்குழுவுல சேர்த்து மரியாதையா எல்லார் முன்னாடியும் பெரிய மேடைகள்ல பாட வெச்சார். எங்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்தார். இதெல்லாம் வாழ்க்கையில முக்கியமான மேடைகள். லாக்டவுன் வந்ததுல இருந்தே கானா பாடகர்கள் பலருக்கும் வாழ்வாதாரம் இல்லாம கஷ்டப்பட்டு இருக்காங்க. இவங்களுக்கு தேவையான எல்லா பொருட்களும் பணம் கலெக்ட் பண்ணி செஞ்சு கொடுத்தோம். வாழ்க்கை ஒரு நாள் மாறும்'' என முடித்தார் கானா முத்து.