தில் ராஜூ


தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜூ. இவர் ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக படங்களை தயாரித்து வருகிறார். கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் படமாக மொழி என்கிற படத்தை தயாரித்தார். இதனைத் தொடர்ந்து மகேஷ் பாபு , ராம் சரண் , ரவி தேஜா, சிரஞ்சீவி , அல்லு அர்ஜூன் உள்ளிட்டவர்களை வைத்து பல படங்களை தயாரித்துள்ளார். 


விஜய் நடித்த வாரிசு படத்தின் மூலம் தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமானார். சமீபத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்திருந்த கேம் சேஞ்சர் படத்தை தயாரித்தார். சுமார் ரூ 450 கோடி தயாரிப்பில் உருவான இப்படம் வசூல் ரீதியாக தோல்வியை தழுவியது. முன்னதாக வாரிசு படம் மிகப்பெரிய வெற்றி என்று அறிவித்த தில் ராஜூ சமீபத்தில் அப்படத்தின் மூலம் தனது 10 சதவீதம் மட்டுமே லாபம் வந்ததாக தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. 


தில் ராஜூ வீட்டில் வருமான வரித்துறை சோதனை


இன்று தில் ராஜூவின் வீட்டில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனையை தொடங்கியது டோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . தில் ராஜூவுக்கு சொந்தமான வீடு அலுவலகங்கள் மட்டுமில்லாமல் அவரது உறவினர்களது வீடு என மொத்தம் 8 இடங்களில் 55 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.





 


சோதனை முடிந்தபின் தில் ராஜூவின் மனைவி தேஜஸ்வினி இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் பேசினார் " எங்க வங்கி கணக்குகள் பற்றிய விவரங்களையும் லாக்கரில் எவ்வளவு பணம் உள்ளது என்பதையும் அதிகாரிகள் தெரிந்துகொண்டார்கள். இது வழக்கமான ஒரு சோதனைதான் " என அவர் தெரிவித்தார். தில்ராஜூவைத் தொடர்ந்து அடுத்தபடியாக பிரபல தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் அவர்களின் வீட்டில் சோதனையைத் தொடங்கியுள்ளார்கள்.