ஜி.வி.பிரகாஷ் குமார்
வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ் குமார் . வெயில் படம் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், மதராசப்பட்டினம், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், சூரரைப் போற்று உள்ளிட்ட படங்களில் முத்திரை பதித்தவர். இசையமைப்பாளரில் இருந்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து எனக்கு இன்னோரு பேர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார், சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர், ஐங்கரன், என அடுத்தடுத்த படங்களில் நடித்து படுபிஸியாக இருந்து வருகிறார்.
என் பார்வையை மாற்றியவர் பாலா!
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஒரு நடிகராக தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் ஜி.வி.பிரகாஷ்.” நான் நடிக்க வரும் போது ஜாலியான கமர்ஷியல் படங்களில் மட்டுமே நடிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் ஒரு சில படங்களுக்கு பிறகு விமர்சனங்கள் எழத் தொடங்கின. அந்த சூழலில் தான் பாலாவின் நாச்சியார் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது அந்த கதாபாத்திரமாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை எனக்கு பாலாதான் சொல்லிக் கொடுத்தார். நடிப்பில் எனக்கு பல கதவுகளை அவர் திறந்துவைத்தார். நாச்சியார் படத்தைப் பார்த்து அனைத்து பத்திரிகைகளிலும் என்னுடைய நடிப்பை பாராட்டியிருந்தார்கள். இதற்கு பிறகு ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிறகு வசந்தபாலன் தற்போது அனுராக் கஷ்யப் படத்திலும் தான் நடிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அனுராக் கஷ்யப் படத்தில் கதாநாயகன்
“இயக்குநர் அனுராக் கஷ்யபின் தேவ் டி படம் எனக்கு ரொம்ப பிடித்தது. நான் அவரது படத்தில் வேலை செய்ய வேண்டும் என்று அவரைப் பார்க்க சென்றேன். அப்போது நான் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு இசையமைத்து வந்தேன். அந்தப் படத்தின் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் பாடல்கள் எதுவும் வெளியாகவில்லை. அனுராக் இடம் நான் அவருடைய பெரிய ரசிகர் என்றும் அவரது படத்தில் வேலை செய்ய ஆசைபபடுகிறேன் என்றும் சொன்னேன்.
ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு நான் போட்டிருந்த பி.ஜி.எம்மை அவரிடம் போட்டுக் காட்டினேன். “அதை பாதியின் நிறுத்திவிட்ட இதை நீ தான் போட்டியா” என்று அவர் என்னிடம் கேட்டார். பின் “நீ என் படத்திற்கு இசையமைக்கிறாயா?” என்றும் கேட்டார்.
ஆனால் தன்னுடைய படத்தில் பாடல்கள் எல்லாம் உருவாகி விட்டதாகக் கூறி பின்னணி இசை மட்டும் என்னை போடச் சொன்னார் . எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும், அவரது ரசிகராக இந்த முடிவிற்கு சம்மதித்தேன். அப்படிதான் கேங்க்ஸ் ஆஃப் வாஸ்ஸீப்பூர் படத்திற்கு நான் பின்னணி இசையமைக்க நேர்ந்தது.
தற்போது அவரது படத்தில் கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன். ஒரு பான் இந்திய திரைப்படமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை என்னால் இப்போதைக்கு தெரிவிக்க முடியாது. அவர் தான் சொல்ல வேண்டும்” என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.