படம் முழுக்க ஒருவர் மட்டுமே நடித்திருப்பதால் ‘ஓங்கி அடிச்சா ஒன்னர டன்னு வெயிட்டு டா..' திரைப்படம் கின்னஸ் சாதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 


இயக்குநரும், நடிகருமான ஜி. சிவா தயாரித்து, இயக்கி நடித்துள்ள படம்தான் ஓங்கி அடிச்சா ஒன்னர டன்னு வெயிட்டு டா. ஒரே ஒரு கேரக்டரை மட்டுமே கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வரும் 25-ஆம் தேதி திரைக்கு வருகிறது.  இந்த திரைப்படத்தில் ஒரே ஒருத்தர் மட்டும் நடித்துள்ளதால், ’ஒரே ஒரு நடிகர் மட்டும் நடித்துள்ள வணிக ரீதியான படைப்பு’ என்ற பிரிவில் கின்னஸ் சாதனைக்கு படக்குழு விண்ணப்பித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு குறித்து அதன் ஹீரோவும், இயக்குநருமான ஜி.சிவா பேசியுள்ளார்.


தமிழ் திரையுலகில் ஒரே ஒரு நடிகரை மட்டும் வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும், முழுக்க முழுக்க கமர்ஷியலாக தர எண்ணி இருந்த படத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு 20 நாட்களில் நிறைவு செய்ததாக கூறிய ஜி.சிவா, படத்தில் ஒரே ஒருத்தர் நடித்து இருந்தாலும், சோகம் மற்றும் காதல் என இரு பாடல்கள் இருப்பதாக தெரிவித்தார். 


ஒரே ஒரு நடிகர் நடித்திருந்தாலும் படம் கமர்ஷியலாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிரடியான சண்டைக் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், சமீபத்தில் நடந்த குற்றங்களை மையப்படுத்தியே திரைக்கதை  அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.சிவா தெரிவித்துள்ளார்.  சண்டைக் காட்சிகளில் தன்னை தவிர யாருமே திரையில் வரமாட்டார்கள் என்ற சிவா, சண்டை காட்சிகளில் எதிராளியின் முகத்தை காட்டவில்லை என்றும், சண்டை காட்சிகளை படமாக்க ஒளிப்பதிவாளருக்கும், சண்டை பயிற்சி இயக்குநருக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்தது என்றார்.


மேலும் ஓங்கி அடிச்சா ஒன்ற டன்னு டா படத்தை கின்னஸ் சாதனைக்காக விண்ணப்பித்திருப்பதாகவும், கின்னஸ் சாதனை அமைப்பு கேட்ட தகவல்களையும், காணொளிகளையும் அனுப்பி வைத்திருப்பதாகவும் ஜி. சிவா தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு ஓகி ரெட்டி சிவக்குமார் மற்றும் அருண் சுசில் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மணி சேகரன் செல்வா இசை அமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை சந்துரு கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜே. பி. அரவிந்த் மேற்கொண்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தை அர்த்தநாரீஸ்வரா மீடியா ஒர்க்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலா ஞானசுந்தரம் தயாரித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை சாய் பாபா பிக்சர்ஸ் வழங்குகிறது.