2025 ஆம் ஆண்டு முன்னணி நடிகர்கள் நடித்த கூலி , தக் லைஃப் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தின. அடுத்து வரக்கூடிய 3 மாதங்களில் பெரும்பாலும் இளம் நடிகர்கள் நடித்த படங்களே வெளியாக இருக்கின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி மூன்று இளம் நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன.
டூட்
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டூட் திரைப்படம் இந்த தீபாவளிக்கு பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ நாயகியாக நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ஆர்.சரத் குமார், ஹிருது ஹாரூன், ரோகினி, ஐஸ்வர்யா சர்மா, டிராவிட் செல்வம் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். டூட் படத்தின் முதல் பாடலான ஊறும் பிளட் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. டிராகன் படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் டூட் திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங் இருக்கும் என எதிர்பார்க்கலாம்
பைசன்
பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள பைசன் திரைப்படம் வரும் அக்டோபர் 17 வெளியாக இருக்கிறது. துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன் , பசுபதி , அழகம்பெருமாள் , ஹரி கிருஷ்னன் ஆகியோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார். கபடியை மையப்படுத்தி உருவாகியிருக்கும் பைசன் படம் துருவ் விக்ரமுக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். பைசன் படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
டீசல்
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படம் டீசல். அதுல்யா ரவி, வினய் ராய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், ரமேஷ் திலக், காளி வெங்கட், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா, அபூர்வ சிங் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திபு நினன் தாமஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹரிஷ் கல்யாண் நடித்து கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் 3 தேசிய விருதுகளை வென்று கவனமீர்த்தது. தற்போது டீசல் படத்தின் மூலம் தனது வெற்றிப்பயணத்தை தொடர்வார் என எதிர்பார்க்கலாம்.