பொல்லாதவன் முதல் வடசென்னை வரை டேனியல் பாலாஜி நடித்த கதாபாத்திரங்களை பார்க்கலாம்.


டேனியல் பாலாஜி திடீர் மரணம்


தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மரணமடைந்துள்ள செய்தி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று இரவு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் கொட்டிவாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அவரது இறப்பிற்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.


ரசிகர்களை கவர்ந்த டேனியல் பாலாஜி கதாபாத்திரம்


தான் நடித்த வில்லன் கதாபாத்திரங்கள் வழி ரசிகர்களை கவர்ந்தவர் டேனியல் பாலாஜி. அவர் நடித்து புகழ்பெற்ற கதாபாத்திரங்களைப் பார்க்கலாம்.


அமுதன் சுகுமாரன் - வேட்டையாடு விளையாடு




கெளதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு படம் டேனியல் பாலாஜியை ரசிகர்களிடம் அடையாளம் காட்டியது. அமுதன் சுகுமாரன் என்கிற அவர் நடித்த கேரக்டருக்கு தனது உடல்மொழியாலும் டயலாக் டெலிவரியாலும் தனி அடையாளம் கொடுத்தார் பாலாஜி. கொடூரமான முறையில் கொலை செய்வது, அடுத்து என்ன செய்யப் போகிறான் என்று யூகிக்கவிடாமல் பார்வையாளர்களை சீட்டின் நுணியில் வைத்திருந்த கேரக்டராக நடித்திருந்தார்.


 ரவி - பொல்லாதவன் 




பொல்லாதவன் படத்தில் டேனியல் பாலாஜியை கிட்ட செகண்ட் ஹீரோ என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருந்தது.   தனுஷ் நடித்த பிரபு  மற்றும் டேனியல் பாலாஜி நடித்த ரவி ஆகிய இருவரும் ஒரே வயதை சேர்ந்தவர்கள். காதல் , குடும்பம் என வாழ்க்கையில் முன்னுக்கு வருவது பிரபுவின் லட்சியம் என்றால் எப்படியாவது ஒரு பெரிய கேங்ஸ்டர் ஆக வேண்டும் தனது அண்ணன் செல்வத்திடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது ரவியின் லட்சியம். இருவரும் ஏதோ ஒரு வகையில் தங்களது அடையாளத்திற்காக ஆசைப்படும் இடத்தில் இருப்பவர்கள். டேனியல் பாலாஜியைத் தவிர இந்த கதாபாத்திரத்தில் வேறு ஒருவரை கற்பனை செய்ய முடியாத வகையில் அவரது நடிப்பு இப்படத்தில் இருக்கும்.


தம்பி - வடசென்னை




டேனியல் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் என்றால் வடசென்னை படத்தின் தம்பிதான். மற்ற படங்களில் வில்லனாக நடித்தவர் இந்தப் படத்தில் ஆன்மீகம் , சமரசத்தை பேசும் ஒருவராக இருப்பார். குனா , அன்பு,  ராஜன் என பிரிந்து கிடக்கும் வெவ்வேறு தரப்பினரை இணைக்கும் ஒரே நபர் தம்பி. தம்பிக்கு பின்கதையாக வடசென்னை படத்தில் காட்சிகள் இருப்பதாக வெற்றிமாறன் கூறியிருந்தார். தற்போது அது நிறைவடையாமல் போய்விட்டது.


இவை தவிர்த்து காதல் கொண்டேன் படத்தில் போலீஸாக, பிகில் , பைரவா, என்னை அறிந்தால் , வை ராஜா வை என தான் நடித்த சின்ன சின்ன கதாபாத்திரங்கள் வழியாக ரசிகர்களை எண்டர்டெயின் செய்தவர் டேனியல் பாலாஜி. இந்த கதாபாத்திரங்களின் வழியாக என்றும் மக்களால் அவர் நினைவுகூறப்பட்டுக் கொண்டே இருப்பார்.