நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள். நேற்று முதல் தளபதி 65 அப்டேட்டுகள் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றது. புது படங்கள் குறித்த எதிர்பார்ப்புகள் இருந்தாலும், விஜய்யின் பழைய படங்களையும் திரும்ப திரும்ப பார்க்கும் ரசிகர் கூட்டத்திற்கு தனி ஃபேன் பேஸ்!


அப்படி என்றைக்குமான எவர்கிரீன் படங்களில் விஜய் நடித்திருப்பது ஏராளம். பெரும்பாலும் அவரது படங்களும், அந்த படங்களில் வரும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துவிடும்.


அந்த வரிசையில். விஜய்க்கும் விளையாட்டு சம்பந்தமான படங்களுக்கும் ஒரு தொடர்பு உண்டு. பத்ரி தொடங்கி பிகில் வரை, ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான கதாப்பாத்திரங்களில் விஜய் நடித்த படங்கள் சிக்சர் ஹிட் ரகம்! ஸ்போர்ட்ஸ்மேன் கதாப்பாத்திரங்களை ஏற்று விஜய் நடித்த படங்கள் பற்றிய ஒரு ரீவைண்ட்!


பத்ரி:



2001-ம் ஆண்டு வெளியான பத்ரி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட். 100 நாட்கள் கடந்த இத்திரைப்படத்தில் கிக் பாக்ஸிங் வீரர் கதாப்பாத்திரத்தில் விஜய் நடித்திருப்பார். இதில் வரும் ‘Travelling soldier’ பாடலில் விஜய் பயிற்சி பெறுவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் மத்தியில் செம ஹிட்டான இப்பாடல் இப்போதும் ‘வொர்க் அவுட் ப்ளேலிஸ்டுகளில்’ நிச்சயம் இடம் பெற்றிருக்கும்.


கில்லி



கில்லி படம் என்றால் சின்ன குழந்தை கூட “கபடி கபடி” என சொல்லும் அளவிற்கு பட்டிதொட்டி எங்கும் போய்சேர்ந்த ஹிட் படம். அப்போது முதல் இப்போது வரை, மாஸ்டர் படத்தில் கூட கபடி சீன் ரீமேக் செய்தாலும் அந்த காட்சிக்கு பறக்கும் விசில்கள் வேற லெவல் ரகம். விஜய் கரியரில் மிக முக்கியமான படமான கில்லி, அந்த கபடி sequenceகளுக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் கதைக்களம் கொண்டது.


அழகிய தமிழ்மகன்



விஜய், இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் அழகிய தமிழ்மகன். 2007-ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில், தடகள வீரராக ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். விஜய் டபுள் ஆக்டிங், ஸ்ரேயா ஷரன் வரிசையில் ஏ.ஆர் ரகுமா இசை வேற, சொல்லவா வேண்டும்! “உன்னால் உன்னால் முடியும் தோழா” என ரசிகர்களை கட்டிப்போட்டது விஜய்யின் அறிமுக பாடல்.


மெர்சல்



வெற்றி, மாறன், வெற்றிமாறன் என மூன்று வேடங்களில் விஜய் நடித்து வெளியான மெர்சல் திரைப்படத்தில் ப்ளாஷ்பேக் காட்சிகளில் மல்யுத்த வீரராக விஜய் நடித்திருப்பார். அப்பா கேரக்டரில் ’வெற்றிமாறன்’ என்ற பெயரில் வரும் விஜய், மல்யுத்த வீரர் போல நடித்திருப்பார். அத்திரைப்படத்தில் வரும் ப்ளாஷ்பேக் காட்சிகள்தான் ரசிகர்களின் ஃபேவரைட்.


பிகில்



பாக்ஸிங், கபடி, மல்யுத்தம், தடகளம் வரிசையில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்த கடைசி ஸ்போர்ட்ஸ் படம்தான் பிகில். ’பிகில் பத்தி சொல்லவா வேணும்!’ படம் ஹிட்தான் என்றாலும், பெண்கள் கால்பந்து விளையாட்டு, போட்டிகள் பற்றி காட்சிப்படுத்த அட்லி இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஆனால், ஃபுட்பால் கோச் கேரக்டருக்கு விஜய் பக்காவாக செட் ஆகியிருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் அவரும் ஒரு கால்பந்து வீரராக மாஸ் காட்டியிருப்பார்.


விஜய் கரியரில் ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் ஹிட்டாவது வழக்கமாக உள்ளது. இன்னும், நிறைய ஸ்போர்ட்ஸ் சப்ஜெக்ட் படங்களில் விஜய் நடிப்பார் என எதிர்பார்ப்போம்! இந்தப்படம் அந்தப்படம் என விஜய் எந்த படம் நடித்தாலும் விசில்கள் பறக்கவிட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஹேப்பி பர்த்டே விஜய்!