தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் அஜித். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் அஜித், கடந்த 2011 ஆம் ஆண்டு தனது ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைப்பதாக அறிவித்தார். அவரது இந்த முடிவு திரையுலகினர் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து பொதுவெளியில் வருவதை தவிர்த்து வந்த அஜித் அவ்வப்போது தனது ரசிகர்களுடன் போட்டோக்களை மட்டும் எடுத்து வந்தார்.



அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் அவரது ரசிகர்கள் அவரை எப்போதும் போல கொண்டாடியே வந்தனர். அவரது படங்கள் வரும் நாளை அவர்கள் திருவிழா போலவே கொண்டாடி வருகின்றனர். இவர்களுக்கான உறவு இப்படி சென்று கொண்டிருக்கும் நிலையில், அஜித் பெயரை பயன்படுத்தி நெல்லை மாவட்டத்தில் மோசடி ஒன்று  அரங்கேறி இருக்கிறது.



 


திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட திருநெல்வேலி மாவட்டம் தாளையத்துப்பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி ஐயப்பனை நம்ப வைத்து இருக்கிறார். மேலும் நடிகர் அஜித், கஷ்டப்படும் ரசிகர்களை மாவட்ட வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக கூறி ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். 


 


 



மேலும் வீடு கட்டி தருவதற்கு முதலில் பத்திரப்பதிவுக்கான தொகை ஒரு லட்சம் செலுத்த வேண்டும் என்றும், அதன் பின்பு வீடு கட்டுவதற்கான தொகை 15 லட்சமும் பத்திரப்பதிவிற்கான தொகையும் சேர்த்து வங்கி கணக்குக்கு வந்துவிடும் என்று கூறி சிவாவிடம் உறுதியளித்திருக்கிறார். 


 



மேலும் அவரை உறுதிபட நம்ப வைப்பதற்கும், அவரிடம் இருந்து பணத்தை பெறுவதற்கும் நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திராவின் அலுவலகத்தில் பணிபுரியும் சங்கர் என்பவரை போலியாக தயார் செய்து ஐயப்பனிடம் பேச வைத்ததோடு, அவர் பணி புரியும் இடத்திற்கு சென்று இருபது ரூபாய் போலி பத்திரத்தில் கையெழுத்தையும் பெற்றிருக்கிறார். இதன் மூலமாக சிறிய சிறிய தொகையாக ஏறத்தாழ ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் வரை சிவாவிடம் ஐயப்பன் கொடுத்து ஏமாந்து இருக்கிறார். 


தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து இது குறித்து சிவாவிடம் கேட்டதற்கு, 'இது குறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம்' என்று கொலை மிரட்டல் விடுத்த்தாகவும், தங்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிப்பதுடன், தாங்கள் அறியாமையால் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடிகர் அஜித்தின் ரசிகர் ஐயப்பனின் மனைவி ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார்.