வீரப்பன் இறந்த பிறகு அவரை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் சொன்ன தகவல் தன்னை ஆச்சரியப்படுத்தியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த வீரப்பன் 2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழக காவல்துறையின் அதிரடி படையால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு நெடுந்தொடராகவும், திரைப்படமாகவும் வெளியானது. இதனிடையே வீரப்பன் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட இடைவெளிக்குப் பின் The Hunt For Veerappan, கூச முனுசாமி வீரப்பன் என்ற பெயரில் ஆவணப்படமாக இந்தாண்டு வெளியாகியிருந்தது. இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இப்படியான நிலையில் வீரப்பனை சுட்ட அதிரடிப் படைக்கு தலைமை வகித்த ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார், வீரப்பன் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அதில், “ஆம்புலன்ஸில் இருக்கும் போது தான் வீரப்பன் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதே உண்மை. எங்களுடைய அதிரடிப்படை ஆபரேஷன் மிகச் சிறப்பாக இருந்ததாக சர்வதேச அளவில் இதுபோன்ற ஆபரேஷன்களை கையாள்பவர்கள் சொன்னது. மற்றவர்கள் சொல்வது மாதிரி விஷம் வைத்து எல்லாம் கொல்லவில்லை. வீரப்பன் காட்டை விட்டு வெளியே வர மாதிரி பிளான் பண்ணோம். அதனை வீரப்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டேன் என அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்தார். ஆனால் இதுதான் என்னுடைய பணி, தொழில் தர்மம் என கூறினேன்.
தான் வெளியே வந்து சிகிச்சைப் பெற்றால் கண் பார்வை சரியாகும் என வீரப்பன் நம்பினார். அப்படிப்பட்ட ஒருவர் கண்பார்வை தெரியாமல் கைத்தடி வைத்து நடந்தால் என்ன ஆகும் என்பதை யோசித்து பாருங்கள். அங்கேயே வீரப்பன் கதை முடிந்துவிடும். அதனால் தான் பார்வையை சரி செய்ய அவர் நினைத்தார். அதேபோல் பணம் வாங்கிக்கொண்டு சிலர் வீரப்பனிடம் இருந்து ஓடி விட்டார்கள். அவர்களை இவரால் பிடிக்க முடியவில்லை. இதே பழைய வீரப்பனாக இருந்திருந்தால் மிகப்பெரிய தண்டனை கொடுத்திருப்பார். ஆனால் இவர்களுக்கு காட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் ஆட்கள் குறைவாகவே இருந்தனர். அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் தொடர்புகள் இருந்தாலும் அந்த நபர்களை தண்டிக்க முடியவில்லை.
இந்த மாதிரி சமயத்தில் தான் நாங்கள் வீரப்பனை வெளியே வர வைக்க பிளான் கொடுத்தோம். அதை அப்படியே நம்பி விட்டார். இதுதான் நடந்தது. வீரப்பன் இறந்த போது அவரின் உடலில் இருந்த உறுப்புகள் எல்லாம் நல்ல நிலையில் தான் இருந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் வள்ளிநாயகம் கூறினார். எலும்புகள், தசைகள் எல்லாம் சரியாக இருந்த நிலையில் ஒரே ஒரு பிரச்சினை கண்ணில் புரை இருந்தது தான் பிரச்சினையாக இருந்தது. எதிரியாக இருந்தால் கூட அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும். அந்த மாதிரி வீரப்பன் தவறான பாதைக்கு சென்று விட்டாலும், அதற்கு கூட ஏன் அப்படி சென்றேன் என நியாயப்படுத்தலாம். காவல்துறையில் இருந்ததால் பிளஸ் பாயிண்டுகளை விட மைனஸ் பாயிண்டுகளை தான் நான் பார்க்க வேண்டும்” என விஜயகுமார் கூறியிருப்பார்.