பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர்களுள் முக்கியமானவர் நடிகர் கார்த்திக் ஆர்யன். சென்ற ஆண்டில் பாலிவுட்டில் ஸ்டார் நடிகர்கள் முதற்கொண்டு எவரும் ஹிட் படங்கள் கொடுக்காத மோசமான சூழல் நிலவியது.


ஆனால், இந்த அவப்பெயரைத் துடைக்கும் வகையில் கார்த்திக் ஆர்யனுடைய ’பூஹ்ல் புல்லேயா 2’ படம் ஹிட் படமாக அமைந்து திரையரங்குகளில் வசூலை அள்ளியது. மேலும், மினிமம் பட்ஜெட்டில் நஷ்டம் ஏற்படாமல் லாபம் பார்க்கும் படங்களை தொடர்ந்து வழங்கி வரும் கார்த்திக் ஆர்யன், பாலிவுட்டில் முக்கியமான நடிகர்களுள் ஒருவராக உருவெடுத்துள்ளார்.


இவர் சென்ற 2020ஆம் ஆண்டு சய்ஃப் அலி கானின் மகளும் பிரபல நடிகையுமான சாரா அலி கானுடன் ’லவ் ஆஜ் கல் 2’ படத்தில் நடிக்கும்போது காதலில் விழுந்தார். இருவரும் தங்கள் உறவு குறித்து வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த ஜோடியை பாலிவுட் வட்டாரங்கள் கொண்டாடித் தீர்த்தன.


ஆனால் ’லவ் ஆஜ் கல் 2’ படம் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றதுடன், இந்த ஜோடியும் ப்ரேக் அப் செய்தது. தொடர்ந்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சாரா அலி கான் பங்கேற்றபோது சாராவும் கார்த்திக் ஆர்யனும் டேட் செய்ததாக கரண் ஜோஹர் வெளிப்படையாவே தெரிவித்து கலாய்த்தார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் இவர்கள் இருவரும் நேற்று சந்தித்துக் கொண்ட ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகின்றன.


பாலிவுட்டின் க்யூட் இளம் ஜோடியாகக் கொண்டாடப்பட்ட கார்த்திக் - சாரா பிரிந்தது அவர்களது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருந்த நிலையில், தற்போது இவர்களது இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்துள்ளன.






இன்னும் சில தினங்களில் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், ப்ரொபோஸ் தினமான நேற்று இருவரும் சந்தித்துக் கொண்டது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் இருவரும் தங்களது காதலை மீண்டும் புதுப்பித்துள்ளனரா எனக் கேள்வி எழுப்பி ரசிகர்கள் உற்சாகத்துடன் இந்த ஃபோட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.