தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இவருக்கும் திரையுலகினருக்கும் நெருக்கமான உறவு இருந்தது. அடிப்படையில் வசன கர்த்தா, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர் என திரையுலகின் பல துறைகளில் கோலோச்சியவரான கருணாநிதியுடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தவர் வைரமுத்து.
கருணாநிதி உயிருடன் இருந்தபோது அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் வைரமுத்து உள்ளிட்டோர் இருந்த மேடையில் பேசியதாவது,
தவறானவன் இருக்கிறான்:
அரசியல்வாதிகளை கண்டிப்பது என்றால் கவிஞர்களுக்கு அதிரசம் சாப்பிடுவது போல. திரைத்துறையில் பார்த்தீர்கள் என்றால் சினிமா நடிகர்கள், சினிமா டைரக்டர்கள், சினிமா வசனகர்த்தாக்கள் இவர்கள் எல்லாருக்குமே அரசியல்வாதி என்றால் அது ஏதோ தீண்டத்தக்காத ஒருவர்கள் என்பது போல.
அரசியல்வாதியிலும் தவறானவன் இருக்கிறான், டாக்டர்களிலும் தவறானவன் இருக்கிறான், வக்கீல்லயும் தவறானவன் இருக்கிறான், நீதிபதியிலும் தவறானவன் இருக்கிறான், கவிஞர்லயும் தவறானவன் இருக்கிறான். அரசியல்வாதி என்றாலே தனிப்பட்ட தகாத ஜாதி என்று ஒதுக்கும் அளவிற்கு ஒரு நிலைமை இருக்கிறது.
விடுபட வேண்டும்
என்னுடைய இந்த வேண்டுகோளுக்கு பிறகாவது வைரமுத்து போன்றவர்கள் அந்த வியாதியில் இருந்து தாங்கள் விடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அப்போது மேடையில் இருந்த வைரமுத்து இதைக்கேட்டு சிரித்தார். கருணாநிதி பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வைரமுத்து மறைந்த முதலமைச்சர் கருணாநிதியுடன் மிகவும் நெருக்கமான நட்புறவில் இருந்தார். கருணாநிதி மட்டுமின்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருடனும் நெருக்கமான நண்பராக திகழ்ந்து வருகிறார்.
வைரமுத்து தற்போது திரைப்படங்களுக்கு பெரியளவில் பாடல்கள் எழுதுவதில்லை. இளம் இயக்குனர்கள், இளம் இசையமைப்பாளர்கள் தங்களுக்கு ஏற்ப இளம் பாடலாசிரியர்களுடன் பணியாற்றுவதால் வைரமுத்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நகைச்சுவை உணர்வும், பேச்சாற்றலும் கொண்ட கருணாநிதி தனது பல மேடைகளில் தனது பேச்சால் மக்களை கவர்ந்திழுக்கும் ஆற்றல் கொண்டவராக திகழ்ந்தார்.
திரைக்கதை:
தமிழறிஞராகவும், தமிழில் புலமை ஆற்றலும் கொண்ட கருணாநிதி எம்ஜிஆர், சிவாஜி,எஸ்எஸ் ராஜேந்திரன் போன்ற பலரின் படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தமிழ் சினிமாவின் அடையாளமாக காலத்திற்கும் போற்றப்படும் பராசக்தி படத்திற்கு வசனம் எழுதிய பெருமையும் கருணாநிதிக்கே உண்டு.
பராசக்தி, மருதநாட்டு இளவரசி, மந்திரி குமாரி, பராசக்தி, பணம், மனோகரா, மலைக்கள்ளன், ரங்கூன் ராதா, ராஜா ராணி, பிள்ளையோ பிள்ளை என 50க்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். இதுதவிர பல பாடல்களையும் எழுதியுள்ளார்.